Perambalur: Dravidar Kazhagam and Rationalist Kazhagam families reunion ceremony!

பெரம்பலூர் மாவட்ட தி.க மற்றும் பகுத்தறிவாளர் கழக குடும்பங்கள் ஒன்றுகூடல் விழா, பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடந்தது. இவ்விழாவில், மாவட்டக் காப்பாளர் அக்ரி ஆறுமுகம், திமுக மாவட்டப் பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு ரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி பங்கேற்று, குடும்பங்கள் ஒன்றுகூடுவதன் நோக்கம் மற்றும் ‘பகுத்தறிவு குடும்பமே பண்பட்ட குடும்பம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சு.ராமு வரவேற்றார். விழாவையொட்டி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் ஏற்பாட்டில் ‘மந்திரம் அல்ல! தந்திரமே!!’ என்ற நிகழ்ச்சியும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ராஜா கென்னடி ஏற்பாட்டில் சிலம்பம் சுற்றுதல், திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மருத்துவர் குணகோமதி ஏற்பாட்டில், சரிவிகித உணவில் குழந்தைகளின் வளர்ச்சி குறித்த நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

மேலும், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஆறு தம்பதியினருக்கு வாழ்த்துத் தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனித்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனை செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முருகானந்தம், இளைஞரணி நிர்வாகி காளிதாஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, மகளிர் பாசறை நிர்வாகிகள், திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக குடும்பத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் ஆசிரியர் சிவசக்தி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!