Perambalur: Expansion of the Puthumai Pen Thittam; 884 students will benefit, Minister Sivashankar informs!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் “புதுமைப்பெண்” விரிவாக்க திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
பெரம்பலூரில், மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏவிற்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கிலிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேரலையில் பார்வையிட்டு மாதந்தோறும் ரூ.1,000 பெறும் வகையிலான வங்கி கணக்கு பற்று அட்டைகளை 884 மாணவிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் உயர்கல்வியை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம் 05.09.2022 அன்று துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,566 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
உயர்கல்வி பயிலும் மாணவிகள் மட்டும் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” என்ற சிறப்பான திட்டத்தை 09.8.2024 அன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 5,099 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இத்திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் 884 மாணவிகள் பயனடைய உள்ளனர்.
இத்திட்டமானது கல்லூரி செல்லும் மாணவியர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், அவர்களுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் வாங்குவது உள்ளிட்ட கல்வி தொடர்பான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 பேருதவியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கை சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோன்ற திட்டங்களை மாணவ,மாணவியர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), இராமலிங்கம் (வேப்பந்தட்டை), மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.