Perambalur: Extension of deadline for shops and institutions in the district to put up nameplates in Tamil: Collector’s announcement!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதி 15ன் படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இதேபோல் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959 இல் விதி 42(பி) இன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும், தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதி 1950 விதி 113 இன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.

 அதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டரை தலைவராகவும்  தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பெரம்பலூர், இணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், திருச்சி, உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சிதுறை, ஆணையர் பெரம்பலூர் நகராட்சி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள், உதவி இயக்குநர் கிராம ஊராட்சிகள் மற்றும் வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பதை தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், தமிழ்ப் பெயர் வைக்காத நிறுவனங்களின் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால், அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்; தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும்.

மேலும், தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழி பெயர் பலகைகளை விட  பெரிய அளவினதாகவும், முதன்மையானதாகவும் பொதுமக்களுக்கு புரியும் வண்ணமும் அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து இடைவெளி விட்டு ஆங்கிலத்திலும் தேவையெனில் அவரவர் விரும்பும் மொழி என 5:3:2 என்ற விகிதாசாரப்படி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறாக தமிழில் பெயர் பலகை வைக்க மே15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தும் மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றி தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!