Perambalur: Extension of time for farmers to get unique identification number for free; Collector’s information!

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் அடுக்ககம் மூலம் நில உடைமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபார்த்து ஆதார் எண்ணை போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சார்ந்த கள அலுவலர்கள் மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கிராமங்களுக்கு வருகை தந்து விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 96,400 விவசாயிகள் உள்ளனர். பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 53,996 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 36,556 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெறும் 17,440 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. இம்மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 60,985 விவசாயிகள் மட்டுமே இதுவரை பதிவு செய்துள்ளார்கள். எனவே, மீதம் உள்ள விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்கள் நில உடைமை விவரங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.

விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விவசாயிகளின் நில உடைமை விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களை விட்டு வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களில்; தங்கள் நில உடைமைகளை இலவசமாக பதிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை பயன்படுத்தி தங்களுடைய பட்டா, கூட்டு பட்டா, ஆதார் அட்டை, அலைபேசி கொண்டு சென்று பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள் மற்றும் இதர விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் சரிபார்த்து விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறலாம். பயிர் கடன், பயிர் காப்பீடு, பயிர் நிவாரணம் வேளாண் மற்றும் இதர சகோதர துறை திட்டங்கள் பெற இந்த அடையாள எண் மிக முக்கியம்.

விவசாயிகள் நலன் சார்ந்த திடடங்களை செயல்படுத்தும்; வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட துறைகளின் திட்ட பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதார் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் வரும் 15.04.2025 ஆம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!