Perambalur: Farmers can register for a unique identification number; can do it free of charge by March 31; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண், கைப்பேசி எண், நில உடைமை குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் சரிபார்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது .
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, அரசின் திட்டங்கள் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறவும் அனைத்து விவரங்களையும், மின்னணு முறையில் சேகரிக்க தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் (Agristack) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர் காப்பீடு திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஆதார் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணியானது தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்களிலும், பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் மேற்கொள்ளும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமின்றி 31.03.2025-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் கிரேஸ் தெரிவித்துள்ளார்.