Perambalur: Periyar always wins. Periyar has never lost in Tamil Nadu: Deputy Chief Minister Udhayanidhi Stalin’s speech!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற சமூக நீதிக்காவலர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:

இன்றைக்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு 359 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு இங்கே வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அமைச்சர் அண்ணன் சிவசங்கருக்கு முதலில் என்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி இருக்கிறார். அந்தத் திட்டங்களின் வெற்றிக்கான சாட்சிதான் இங்கே வந்திருக்கின்ற மக்கள் உங்கள் முகங்களில் தெரிகின்ற அந்த மகிழ்ச்சியும் புன்னகையும். ஆட்சிக்கு வந்ததும் நம்முடைய முதலமைச்சர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’. இன்றைக்கு இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இன்று பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டத்தைப் பின்பற்றி அவர்களும் நடைமுறைப் படுத்தியுள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் ‘காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண் திட்டம்’, மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்பெறுகிறார்கள். மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு மடிக்கணினிகளை நம்முடைய முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’. இத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை நம்முடைய முதலமைச்சர் வழங்கி வருகிறார். இந்த உரிமைத் தொகைத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டினார்கள். சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் முதலமைச்சர் வெற்றிகரமாக முறியடித்து, இன்று ஒரு கோடியே 32 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் 5,000 ரூபாயை வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், மீண்டும் அமையப்போகின்ற நம் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தித் தருவோம் என்ற வாக்குறுதியையும் நம்முடைய முதலமைச்சர் கொடுத்துள்ளார். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் திட்டம். இத்திட்டத்தில் இன்று 2 கோடியே 60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக்காக்கும் 48’ எனும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் இன்று நான்கு லட்சம் உயிர்களை நம் அரசு காப்பாற்றியுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பேருக்குப் பட்டாக்களை வழங்கியுள்ளது நம் அரசு.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சில திட்டங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் காலணி தொழிற்சாலை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று 4,000 பேருக்கு வேலைவாய்ப்பை நம் அரசு உறுதி செய்துள்ளது.

பெரம்பலூர் – துறையூர் இடையே 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரஞ்சன்குடி கிராமத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாடாலூர் திருவிளக்குறிச்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

செந்துறை துணை மின்நிலையம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணி. செந்துறையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணி. வாரணவாசி கிராமத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அரியலூர் விளையாட்டரங்கில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சியில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் இன்று நமது தமிழ்நாடு, இந்தியாவிலேயே வளர்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதலிடத்தில், குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இரட்டை இலக்க வளர்ச்சி, 11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த அருமைச் சகோதரிகள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்குழு சகோதரிகளின் வளர்ச்சியை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். குழுக்களுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் இந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய அரசு இவற்றை வெறும் கடன் தொகையாகப் பார்க்கவில்லை, மகளிர் உங்கள் உழைப்பின் மீது வைத்துள்ள ‘நம்பிக்கைத் தொகையாகவே நம்முடைய அரசு இதை பார்க்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வழங்குவது போல, இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் இடம் பெற்றுள்ளன. அந்த அடையாள அட்டையின் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. குழு சகோதரிகள் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை, 100 கிலோமீட்டர் தூரம் வரை எந்தவிதக் கட்டணமும் இன்றி எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம்.

இப்படி உங்கள் முன்னேற்றத்துக்காக நம்முடைய அரசு என்றைக்கும் துணையாக இருக்கும். கடன் இணைப்பைப் பெறுகின்ற சகோதரிகள் அனைவரும் மென்மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அதைத் தொடர்ந்து இந்த விழாவில் வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்க இருக்கிறோம். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் தேடிச் சென்று பட்டாவிற்காகக் காத்திருந்த காலம் மாறி, இன்று அரசே உங்களைத் தேடி வந்து பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறது. இனி உங்கள் இல்லங்களில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உறங்கலாம். ஏனெனில் பட்டா என்பது உங்கள் கனவு; உங்கள் கனவை நம் அரசு நனவாக்கியுள்ளது. பட்டா பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

வீடு கட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தையும் நாம் செயல்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும், அந்த முகவரி ஒரு இனிய இல்லமாக இருக்க வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அடிக்கடி சொல்வார். அந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கி நம் திராவிட மாடல் அரசு இன்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

இங்கே மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கான நலத்திட்ட உதவிகளும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு உங்களுக்கு உபகரணங்களை மட்டும் வழங்கவில்லை, அதோடு சேர்த்து உங்கள் உரிமைகளையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை நியமன உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில்தான் நம்முடைய தலைவர் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் இன்று சுமார் 13,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.

இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று, தினமும் மக்களைச் சந்திக்கின்ற ஒரே முதலமைச்சர் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சென்னையில் கோட்டையிலிருந்து மட்டும் ஆட்சி நடத்தாமல், மக்களுக்காகச் சுற்றிச் சுழன்று உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தினந்தோறும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அடுத்து வரவிருக்கின்ற திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் உங்கள் நலனுக்காக இன்னும் நிறைய திட்டங்களை அவர் நிச்சயம் செயல்படுத்துவார். ஆகவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நீங்கள் அனைவரும் நம்முடைய முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் ஐயா ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது தொண்டைப் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதேபோல புகைப்படக் கண்காட்சியும் இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது பணிகளைத் தொகுத்து நூற்றாண்டு மலரையும் இங்கே வெளியிட்டுள்ளோம். இதற்கு முன்பு மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் சார்பாகத் தயாரிக்கப்பட்ட நூற்றாண்டு மலரையும் சென்னையில் நான்தான் வெளியிட்டேன். அந்தப் பெருமையும் எனக்கு உண்டு.

முதலமைச்சர் அவரது அனைத்து நூல்களையும் இன்று அரசு உடைமையாக்கியுள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டைப் பெற வேண்டி முதன்முதலாக 1981-ஆம் ஆண்டு டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி ஆதரவு திரட்டியவர் ஐயா ஆனைமுத்து அவர்கள். நான் கலைஞரின் பேரனாக மட்டும் இங்கே வரவில்லை, பெரியாரின் பேரனாக, பேரறிஞர் அண்ணாவின் பேரனாக, பெரியவர் ஆனைமுத்து அவர்களின் கொள்கைப் பேரனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பெரியாரின் தொண்டர்களுக்கு எப்பொழுதுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. அவர்கள் துறவிகளை விட மேலானவர்கள் என்று பெருமையாகச் சொல்வோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் ஐயா ஆனைமுத்து அவர்கள். அவர் ஒரு கட்டுரையில், “பெரியார் வென்றாரா?” என்ற வினாவை எழுப்பி, அதற்கு அவரே பதிலும் கூறியுள்ளார். “பெரியார் தோற்றார் என்று சொன்னால் அது ஒட்டுமொத்தத் தமிழர்களின் தோல்வி” என்று ஆனைமுத்து அவர்கள் எழுதியுள்ளார். எனவே, தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுதும் வெல்வார். பெரியாருக்கு தமிழ்நாட்டில் தோல்வியே கிடையாது. அதேபோல தமிழ்நாடும் தமிழர்களும் எப்பொழுதும் வெல்வார்கள்; அதை யாராலும் தடுக்க முடியாது.

ஐயா ஆனைமுத்து பெரம்பலூருக்கு மட்டும் பெருமையல்ல, தமிழ்நாட்டுக்கே அவர் மிகப்பெரிய அடையாளம். இங்கே ஆளூர் ஷாநவாஸ் பேசும் பொழுது குறிப்பிட்டது போல, திராவிட இயக்கத் தலைவர்கள் ஐயா நாகூர் ஹனீபா, ஐயா ஆனைமுத்து போன்ற தலைவர்களின் நூற்றாண்டை நாம் கொண்டாடியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார் மற்றும் பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு போன்ற சிறப்புமிக்க நிகழ்வுகளைக் கொண்டாடிய பெருமை நம்முடைய திராவிட மாடல் அரசையும் முதலமைச்சரையும் சேரும்.

எனவே, மண்டல் குழுவின் தந்தை எனப் போற்றப்படும் பெரியவர் ஆனைமுத்து அவரின் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாடுவதில் நம்முடைய அரசு பெருமை கொள்கிறது. இந்த நிகழ்ச்சியையும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளையும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு மீண்டும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம் என பேசினார்.

முன்னதாக, பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி வரவேற்றார். எம்.எல்.ஏக்கள் விசிக ஆளூர் ஷானவாஸ், பெரம்பலூர் பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், போலீஸ் எஸ் .பி அனிதா, டி ஆர் ஓ கண்ணன், எம்எல்ஏ பிரபாகரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கா.சொ. கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ கு.சின்னப்பா, மாவட்ட திட்ட அலுவலர் தேவநாதன், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சு. ரமேஷ், ஆர்டிஓ அனிதா, நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், குரும்பலூர் செயல் அலுவலர் க.தியாகராஜன், பேரூராட்சி தலைவர்கள் ஜாகீர் உசேன், சங்கீதா ரமேஷ், வள்ளியம்மை ராஜேந்திரன், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர், மாநில திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் துரைசாமி, ராஜ்குமார், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.ஆர்.சிவசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை ஜெகதீஸ்வரன் நல்லதம்பி, டாக்டர் வல்லவன், அழகு நீலமேகம், மதியழகன் ராஜேந்திரன், டாக்டர் ஜெயலட்சுமி கருணாகரன், அரியலூர் லதாபாலு, எசனை ஆறுமுகம், புலவர் செந்தலை கவுதமன், நெசவாளர் அணி பாலையூர் மணிவாசகம், ஆணைமுத்துவின் வாரிசுகள், கட்சியினர் மற்றும் பெரியார் தொண்டர்கள் மற்றும் வருவாய்த்துறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!