Perambalur: Fundraising meeting for CPI(M) All India Conference and Seminar; Rs. 5 lakhs donated by the district committee!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு, செந்தொண்டர் பேரணி – பொதுக்கூட்டம் மதுரையில் வருகின்ற ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கு, பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் நிதியளிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் நடந்தது, வரவேற்பு குழுத் தலைவர் டாக்டர் சி. கருணாகரன் வரவேற்றார். பெரம்பலூர் நகர செயலாளர் இன்பராஜ், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, குன்னம் வட்ட செயலாளர் செல்லமுத்து, ஆலத்தூர் வட்ட செயலாளர் பாஸ்கரன், வேப்பந்தட்டை வட்ட செயலாளர் சக்திவேல், மின்னரங்கம் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ரெங்கநாதன், ஏ.கே.ராஜேந்திரன், கலையரசி ஆகியோர் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு குறித்து எடுத்துரைத்து பேசினர்.

அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: மத்தியில் ஆளக்கூடியவர்கள் எந்த அரசாக இருந்தாலும் அவர்களால் மாநில அரசுக்கு பாதிப்பு என ஏற்பட்டால் தமிழக அரசுடன் கைகோர்த்து ஒன்றியது அரசை எதிர்த்து போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் முன்னணியில் இருக்கும், அதே போல் தமிழக அரசால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மக்களோடு மக்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நின்று போராடுமே தவிர தமிழக அரசுடன் நிற்காது, திமுக அரசு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் ஆகின்றது, அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 78 சதவீத நிறைவேற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர். இன்னும் ஓராண்டுக்குள் 22 சதவீதத்தை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது, மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தவர் மேலும் பேசுகையில், மதுரையில் நடைபெற இருக்கின்ற மாநாடு இந்திய அளவில் அரசியலை தீர்மானிக்கின்ற மாநாடாக அமையும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, கோகுல கிருஷ்ணன், இரா.எட்வின், ராமகிருஷ்ணன், மகேஸ்வரி உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்பு குழு பொருளாளர் S. அகஸ்டின் நன்றி கூறினார். முன்னதாக அகில இந்திய மாநாட்டிற்கு பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் ரூ 5 லட்சம் நிதியினை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கினர்.

அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற கூடிய மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு என்கிற சதித் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட கூடிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு எதிர்க் கட்சியினர் கலந்துகொள்ள கூடிய மாநாடு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது இது ஒரு நல்ல முன் முயற்சி, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்தால் தமிழகம், கேரளா, கர்நாடக, உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும், ஏற்கனவே இருக்ககூடிய பாராளுமன்ற தொகுதிகளினுடைய எண்ணிக்கை குறைய இருப்பதனால்தான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. மட்டுமல்லாமல், பாதிக்கப்பட கூடிய மாநிலங்களின் கூட்டத்தை இன்றைய தினம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அகில இந்திய அளவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை வற்புறுத்துவதாக தெரிவித்தார். ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை பழிவாங்கிற வகையில் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்,மொழி திணிப்பு,மாநில அதிகாரங்கள் பறிப்பு போன்ற எதிர்ச்சோய அதிகார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதற்கெதிராக பாதிக்கப்படக்கூடிய மாநில முதலமைச்சர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு இந்த கூட்டு நடவடிக்கை குழு பயன்படும் என்றார்.

தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கூட பாஜகவின் டாஸ்மாக் ஊழல் தொடர்பான போராட்டத்திற்கு வரவேற்பளித்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன .? என்று கேட்டதற்கு

“அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம்..அவர் டாஸ்மாக்கை எதிர்ப்பதற்கும் எந்த ஒரு தார்மீக உரிமையும் அண்ணாமலைக்கு கிடையாது. அவர் ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார். அப்படி என்றால் முதலில் பிஜேபி ஆள்கின்ற மாநிலங்களில் போதைப் பொருள்களை தடுக்கட்டும், போதைப் பொருள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. அதே மாதிரி அரசாங்கமே இதுமாதிரியான விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது மாறுபட்ட கருத்து, அதை சொல்வதற்கான தகுதி அண்ணாமலைக்கு கிடையாது “.

டாஸ்மாக் போராட்டத்திற்கு பாஜகவை ஆதரிப்பது தொடர்பாக திருமாவளவனிடம் கேட்க வேண்டும் என்றார். 2026ல் கட்டாயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதியில் போட்டியிடும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ஆங்காங்கே படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடக்கவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியதற்கு பேசிய. சண்முகம்:

தினந்தோறும் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறோம் . மக்களை பாதிக்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தால் அது திமுக ஆட்சியிலோ அல்லது அதிமுக ஆட்சியிலோ நடந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டில் மாறாமல் தொடர்ந்து எப்போதும் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற தவெக தலைவர் விஜய்யின் அழைப்பிற்கு அழைப்பிற்கு தங்களின் பதில் என்ன என்ற கேள்விக்கு:

நான் ஏற்கனவே கூறிவிட்டேன் “முதலில் அத்தைக்கு மீசை முளைகட்டும்.. அவரு இப்பதான் முளைச்சிருக்காரு, அவரு இன்னும் வளர வேண்டியது எவ்வளோ இருக்கு, ஆனா எடுத்தவுடனே கட்சி ஆரம்பிச்சு உடனே நேரடியாக முதலமைச்சர்தான் என்கிற கருத்தில் அவரு இருக்காரு.. தமிழ்நாட்டு அரசியலில் அது சாத்தியமே கிடையாது

தமிழ்நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சி 63 இருக்கிறது ,பதிவு செய்யப்படாத கட்சிகளும் இருக்கிறது..இதற்கு மத்தியில் 63 ல் தமிழக வெற்றி கழகமும் ஒன்று எனவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!