Perambalur: How to protect livestock in summer? Announcement from the Animal Husbandry Department!
கோடைக் காலத்தில் அதிகரித்துள்ள வெயில் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பிணை ஏற்படுத்தும். கோடைக் காலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது கறவை மாடுகளில் உற்பத்தியாகின்ற வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உடல் வெப்பநிலை உயர்ந்து வெப்ப அயற்சி ஏற்படுகிறது. இதனால் உடல் சோர்வு, தீவனம் உண்ணாமை, நிழல் மரங்களை நோக்கி நகர்ந்து ஒதுங்கி இருத்தல், வெப்பம் தணிக்கும் பொருட்டு வாய் திறந்து நாக்கு வெளியே தொங்கி உமிழ்நீர் வழிந்தபடியே இருத்தல், வாய் மூலம் மூச்சுவிடுதல் ஏற்படும்.
பால் கறவை மாடுகள் மற்றும் கன்றுகள் விரைவில் வெப்ப அயற்சியால் பாதிக்கக்கூடும்கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைந்துவிடும், சினை பிடிக்கும் திறன் குறைந்துவிடும். ஆடுகளில் இறைச்சி உற்பத்தி அளவு பாதிப்பு ஏற்படும் உடல் வளர்ச்சி குறைந்து விடும் பன்றிகளில் வியர்வை சுரப்பி இல்லாததால் வெப்பத்தால் உடல் எடை குறையும் கோழிகள் வெப்ப அழற்சி காரணமாக இறப்பு அதிகரிக்கும் உடல் எடை குறையும் வளர்ப்பு பிராணிகளான நாய்கள் அமைதியின்றியும் தோல் வியாதி ஏற்படும் நிலையில் உருவாகும். நாட்டின மாடுகளை விட தற்போது கலப்பின கறவை மாடுகள் அதிகமாக பராமரித்து வருவதால் வெப்ப அயற்சியால் நடுக்கம் ஏற்பட்டு இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
கறவை மாடுகளுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்ப வேண்டும். நீண்ட தூரம் மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்புவதை தவிர்க்கவேண்டும். கால்நடைகளுக்கு நாளொன்றுக்கு 4 முதல் 5 முறை சுத்தமான தண்ணீர் அளிக்க வேண்டும், தண்ணீரில் குளுக்கோஸ் அல்லது எலக்ட்ரால் பவுடர் மற்றும் வைட்டமின் திரவங்கள் மற்றும் தாது உப்பு கலவைகளை 40 கிராம் அளவு சேர்க்கலாம், நாள் ஒன்றுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டும்.
மேலும் பால் கறக்கும் மாட்டிற்கு லிட்டர் ஒன்றிற்கு 5 லிட்டர்அளவு கூடுதலாக தண்ணீர் அளித்திட வேண்டும். தண்ணீர் கோடை காலங்களில் அதிகம் உட்கொள்ள வேண்டும். அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொட்டாசியம் சத்து மிகுந்த கோதுமை தீவனம் மற்றும் வைட்டமின் நியாசின் 6 கிராம் தினசரி அடர் தீவனத்தோடு அளிக்கலாம். மேய்ச்சலுக்கு சென்று வந்த பின் கால்நடைகளை தண்ணீர் மூலம் குளிக்க வைக்க வேண்டும். நிழல் பகுதியிலேயே கால்நடைகளை பராமரிக்க வேண்டும். பண்ணைகளில் மின் விசிறி, குளிர்ந்த நீர், நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்திடவேண்டும். மாட்டு கொட்டகையின் உட்புறம் தென்னங்கீற்று மற்றும் பனை ஓலை அமைத்து வெப்பத்தை குறைக்கலாம். பகல் நேரங்களில் பசுந்தீவனம் மட்டுமே வழங்க வேண்டும். இரவு நேரங்களில் உலர் தீவனம் வழங்க வேண்டும். பகல் நேரங்களில் அடர் தீவனம் அளவு சற்று அதிகம் அளித்தால் பால் உற்பத்தி குறைவு படாமல் பாதுகாக்கலாம். சாதாரணமாக உடல் எடை பாதுகாக்க 2 கிலோ தினசரி அளிக்க வேண்டும். கோடை காலங்களில் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் அரை கிலோ சேர்த்து அளித்திட வேண்டம், கலப்பு தீவனம் அளித்த பின் தண்ணீர் வைத்தால் தண்ணீர் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கலாம்.
கொட்டகைகளில் ஈரமான சாக்குகளை சுற்றி வைக்கலாம், நீர் தெளிப்பான்கள் மூலம் 15 முதல் 20 நிமிடங்கள் மாடுகளின் மேல் நீர் தெளித்துவிடலாம். ஆடுகள் காலை 6 முதல் 11 மணிவரை மேய்க்கலாம். அகத்தி, சவுண்டல், மா, பலா, ஆல், வேம்பு, கொடுக்காபுலி, வாகை போன்ற மரத்தழைகளை தீவனமாக பயன்டுத்தலாம். கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும் இரவிலும் மட்டும் தீவனம் அளிக்கவேண்டும். உச்சி வெயில் சமயத்தில் தீவனம் அளிக்கக்கூடாது. வழக்கத்தை விட 20 சதவீதம் அளவு குறைந்த எண்ணிக்கையிலேயே கோழிகள் வளர்க்க வேண்டும். குடிநீரில் வைட்டமின் சி மருந்து ஒரு கோழிக்கு 10 மிகி கலந்து கொடுக்கவும், பி காம்ப்ளக்ஸ் விட்டமின் கலந்தும் கொடுக்கலாம். வளர்ப்பு நாய்களை கார் அடைப்பு பகுதியில் சுருக்கி அடைக்கக் கூடாது மற்றும் சூரிய வெயில் படும் திறந்த வெளிப்பகுதியில் அனுமதிக்கக்கூடாது. அடிக்கடி பி காம்ப்ளக்ஸ் விட்டமின் கலந்து வைக்க வேண்டும்.
நாய்கள் குடிதண்ணீரில் ஓ ஆர் எஸ் பவுடர் கலந்து வைக்க வேண்டும். நாய்களின் நடைபயணம் அதிகாலை மட்டுமே அமைக்க வேண்டும். அவசியமில்லாமல் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றம் செய்யும் போக்குவரத்தினை தவிர்க்கவேண்டும். கால்நடைகளை வெளியூருக்கு கொண்டு செல்லும் நிலையில் ஒரு மணி நேர இடைவெளியில் தண்ணீர் அளிக்கவேண்டும். மர நிழலில் ஓய்வுக்கு பின்னர் பயணம் தொடர வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே பயணம் அமைய திட்டமிடப்பட வேண்டும். வழக்கமான எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையிலான மாடுகளையே ஏற்றிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகம் அல்லது பொதுவான தண்ணீர் வழங்கும் இடங்களில் சிமெண்ட் தண்ணீர் தொட்டி அமைத்து பாதுகாக்கலாம்.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பாக அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து கால்நடைகள் தாகம் தீர்க்க நீர் நிரப்பப்பட்டுள்ளது. அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் தாது உப்புக்கலவை வழங்கப்படுகிறது. கால்நடைகளில் வெப்ப அயற்சி காரணமாக வலிப்பு மற்றும் பிற அறிகுறிகள் தென்படும் போது உடனே அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி உரிய அறிவுரை மற்றும் மருத்துவம் பெற்று பயன்பெறலாம். கிராமத்தில் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் பொதுவான தண்ணீர் டேங்க் மற்றும் பரிமாறும் இடங்களில் சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கால்நடைகளை பாதுகாத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கால்நடை வளர்ப்போர் அனைவருக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் முகாம் கால்நடை மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறவும், தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களிலும் 1962 கால்நடை மருத்துவ சேவை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் போது “1962” கால்நடை மருத்துவ சேவையை பயன்படுத்தி பயனடையுமாறு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.