Perambalur: “I will bring the stalled medical college project in the district to fruition,” says AIADMK candidate Elambai R. Tamilselvan in an interview.

பெரம்பலூர் தனித் தொகுதியின் அதிமுக வேட்பாளராக 4முறை களம் காணும், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான இளம்பை. இரா. தமிழச்செல்வன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:
2011 மற்றும் 2016 சட்ட மன்ற தேர்தல்களில் இரண்டு முறை வெற்றி பெற்று பெரம்பலூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்துள்ளேன். நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.. நான் ஒரு தொகுதியின் அமைச்சராக செய்ய வேண்டியதை ஒரு எம்எல்ஏவாக செய்துள்ளேன். வழக்கமாக சாலை போடுவது பழைய கட்டிடத்திற்கு பழுது பார்த்து வெள்ளை அடிப்பது எந்த ஆட்சி வந்தாலும் செய்வது வழக்கமான ஒன்று!
ஜனநாயகத்தின் 4வது தூண் பத்திரிக்கையாளர்கள். ஊடகங்கள் நினைத்தால் தான் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் வெளி உலகத்திற்கும் தெரிவிக்க முடியும். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது நடந்த விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்ட பிம்பமான விமர்சனங்களையும் கடந்து வந்துள்ளேன். நல்ல விமர்சனங்களை சொல்லும்போது ஏற்றுக்கொண்டு என்னை சரி செய்து இருக்கிறேன். இல்லாத விமர்சனங்களை செய்த போதும் பொதுவாழ்க்கையில் அதை தாங்கிக் கொண்டு கடந்து வந்துள்ளேன். நல்லது நடக்கும் போது புகழ்வதையும், தவறுகளை சுட்டிக்காட்டபோது நான் கோபப்படுவபன் நான் அல்ல! பொது வாழ்க்கை வந்து விட்டால் விமர்சனங்கள் எல்லாம் தாங்கி வர வேண்டும் என்பதை 17 வயதிலேயே நான் தெரிந்து கொண்டேன். நல்ல விமர்சனங்களை சொல்லுங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அவற்றைத் திருத்திக் கொள்வோம். 50 வயதை தாண்டியவர்கள் ஐந்துக்கு மேற்பட்டவர் இருப்பீர்கள். மற்றவர்களெல்லாம் இளம் வயதில் இருக்கிறீர்கள்.
பல திட்டங்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசப்படும். இது மாதிரி பேசப்பட்ட பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளேன். 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விசுவகுடி நீர் தேக்கம், வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த பொழுது அந்த அணைக்கட்டு அருகே பொழுதுபோக்கு பூங்கா, வாகனம் நிறுத்துமிடம் வசதிகள், கோபுரங்கள் செய்து தரப்பட்டுள்ளது.
இதே போல பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர் நீர்த்தேக்கம் தொடங்க ஆய்வு செய்யப்பட்டபோது வருவாய் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு 50 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்ததால், அவர் அணை கட்ட தொடர்ந்து தடை போட்டு வந்தார். அதையும் மீறி அப்போதைய முதலமைச்சராக இருந்த அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 10 லட்சம் நிதி ஒதுக்கி ஆய்வு பணிகளை நடத்தினார். ஆட்சி மாறியதால் இந்த பணி தற்பொழுது கிடப்பில் உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்த உடன் சின்னமூட்லு அணை திட்டம் தொடங்க வாதாடி போராடிக் கொண்டு வருவேன்.
வெள்ளாற்றில் பாண்டகப்படி – வெண்பாவூர் இடையே 8 கோடியில் ஒரு தடுப்பணை, இதேபோன்று ரூ. 9 கோடியில் மறவநத்தம் பகுதியில் ஒரு தடுப்பணை, ரூ. 8.5 கோடியில் வி களத்தூர் பகுதியில் ஒரு தடுப்பணை என மூன்று தடுப்பணைகளை கட்டி அப்பகுதி சிறு குறு விவசாயிகள் முப்போகம் பயிர் சாகுபடி செய்து அவர்களது வாழ்க்கை சிறக்க அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் குளம், குட்டை, கண்மாய்கள் ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு மராமத்து பணிகள் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் வெங்கலம், எளம்பலூர், பசும்பலூர், தேனூர், ஆறு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டது.
வேப்பூர் மகளிர் கல்லூரியை சட்டமன்றத்தில் நான் தான் கேட்டேன். அப்போது எதிர்க்கட்சி எம்எல்ஏவாக தற்போது அமைச்சராக இருக்கும் மதிப்பிற்குரிய சிவசங்கர் இருந்தார். பின்தங்கிய அந்த பகுதி கல்வியில் பெண்கள் பின்தங்கியுள்ளனர் அவர்கள் முன்னேற வேண்டும் என அப்போதைய இயக்குனர் ஷீலாபிரியா தெரிவித்ததன் பேரில், பெரம்பலூர் தொகுதிக்கு வர வேண்டிய மகளிர் கல்லூரி வேப்பூருக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியாக இருந்த குரும்பலூர் கல்லூரி, அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்விச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பகுதி மாணவர்கள் தொழில் கல்வி பயில நாரணமங்கலத்தில் அரசு ஐடிஐ. கொண்டுவரப்பட்டது. இதில் பெண்களுக்காக சோலார் எனர்ஜி என்ற புதிய பாடத்திட்டமும் உள்ளது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து போராடி நான் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் 5 மாடி கட்டிடத்தை 20 கோடி மதிப்பில் கொண்டு வந்தேன். ஒரே நேரத்தில் 250 பேர் தங்கி மருத்துவ பயன்பெறும் வகையிலும், எம்ஆர்ஐ ஸ்கேன் சென்டரும் கொண்டுவரப்பட்டது. விபத்துகளில் சிக்கியவர்களை காக்க பாடலூரில் கிடப்பில் உள்ள தர்மாகேர் சென்டர் வரும் ஆட்சியில் கொண்டு வரப்படும்.
இந்த மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு சட்டமன்றத்திலே நான் எம்எல்ஏவாக இருந்தபோது பல முறை குரல் கொடுத்துள்ளேன். அந்த மருத்துவக் கல்லூரிக்கு சரியான இடம் கொடுக்காததால் அது கிடப்பிலேயே கிடக்கிறது. சரியான இடத்தை கொடுத்திருந்தால் அன்றே மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கும். வரும் தேர்தலில் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் இந்த மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து காட்டுவேன். கடந்த 10 ஆண்டு கால காலங்களில் நான் எம்எல்ஏவாக இருந்த பொழுது நல்ல பல திட்டங்களை மன நிறைவோடு மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று, இரண்டு விடுபட்டிருந்தாலும் அது வரும் ஆட்சி காலத்தில் கொண்டு வருவேன். ஓட்டு கேட்டு நான் பொதுமக்களின் வாசலில் முற்றத்தில் நிற்கும்போது நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பார்கள். நான் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி மத இன மதம் மோதல்களை ஏற்படுத்தாத ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான்தான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஊடக நண்பர்களும் நல்ல விமர்சனங்களை முன்வையுங்கள் என்னை திருத்திக்கொள்கிறேன் என பேசினார். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டி.என். சிவப்பிரகாசம் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிள் பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497