Perambalur: Incidents of battery and diesel theft from parked trucks are on the rise; truck owners are worried!

பெரம்பலூர் மாவட்டம், திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், ஆனந்தன் ஆகிய இருவரும் ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் தங்களது லாரிகளை நேற்று பணிகளை முடித்துவிட்டு நாரணமங்கலம் கிரமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பஞ்சு ஆலையின் முன்பு நிறுத்தி வைத்தனர். பின்னர், தங்களது வீடுகளுக்கு சென்று இன்று காலை திரும்பி வந்து பார்த்த போது, 3 லாரிகளில் இருந்த சுமார் ரூ. 2 லட்ச ரூபாய் மதிப்புடைய 6 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாடாலூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதே போல் நேற்று முன் தினம் பாடாலூர் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள கமலசேகர் என்பவரது கிரசரில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து 2 பேட்டரிகளையும், மேலும், லாரி டேங்கரில் இருந்த 50 லிட்டர் டீசலையும் திருடி சென்றதோடு கிரசரில் இருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட இரும்பு பொருள்களையும் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக கமலசேகர் பாடாலூர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த மாதம், குன்னம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரிகளை ஓட்டுனர்கள் பணிகள் முடிந்தவுடன் அரியலூர் செல்லும் சாலை ஓரமாக இரவு நிறுத்திவிட்டு சென்று பின்னர் காலை வந்து பார்த்தபோது நாகராஜ், இளையராஜா உள்ளிட்ட 11 லாரிகளில் 22 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து இது போன்றே கடந்த சில வாரங்களாகவே ஆள் நடமாட்டம் இல்லா பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை குறிவைத்து அதில் இருக்கும் பேட்டரிகள் மற்றும் டீசல்களை திருடும் சம்பவங்கள் தற்போது தொடர் கதையாகி வருவதால் லாரி ஓனர்கள் தங்களது லாரிகளை பணி நடக்கும் இடங்களில் நிறுத்துவதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஆளில்லா வீடுகளை குறிவைத்து திருடும் சம்பவங்களும், பூட்டிருக்கும் கடைகளில் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்களும் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வரும் நிலையில், தற்போது லாரிகளில் பேட்டரிகள் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் லாரி உரிமையாளர்கள் பீதி அடைந்துள்ளனர். இனியாவது போலீசார் விழித்துக் கொண்டு இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.