Perambalur Local Body elections in the district, honest and transparent to the petition requesting the DMK party
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த கோரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி திமுகவினர், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமாரிடம் நேற்று முன்தினம் இரவு மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளதாவது:
குறைந்த கால இடைவெளியில் திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளதால், முறையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்து, அது தள்ளுபடி ஆகாமல் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள் குறித்து முறையாக, விளக்கமான உத்தரவை அனைத்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். குடியிருப்புச் சான்றிதழ், கூட்டுறவு வங்கியில் கடனில்லா சான்றிதழ், முன் மொழிபவர்களுக்கான விளக்கம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற, எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது.
மேலும், ஆளும் கட்சியினர் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு இலவசப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இதை முறையாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறை விதிகள் இருப்பதாலும் தற்போது உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களைப் பயன்படுத்தக்கூடாது. அனைத்து அலுவலகங்களையும் பூட்டி ஆட்சியரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் உள்ள குறைகளை களைந்து, முறையான பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை அக்கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப.செந்தில்நாதன், தலைமை கழக பொறுப்பாளர் ஸ்ரீதரன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன் (வேப்பூர்), வேப்பந்தட்டை நல்லத்தம்பி, மாவட்ட பொறுப்பாளர் வேப்பந்தட்டை ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.