Perambalur: Minister Sivashankar inaugurated the extension of the bus route!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழித்தடங்களை நீட்டிப்பு செய்ததுடன் கொடியசைத்து தொடங்கியும் வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் கோரிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் வழித்தட நீட்டிப்பு வேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் – குரும்பாபாளையம் நகரப்பேருந்து, கொட்டரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பெரம்பலூர் – கொளக்காநத்தம் – அரியலூர் செல்லும் புறநகர் பேருந்து ஜெமீன் பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம் வழியாக நீட்டிப்பு செய்தும், அரியலூர் – கொளக்காநத்தம் நகரப் பேருந்து காலை வழியாக தெரணி வரை நீட்டிப்பு செய்தும், திருச்சி கூடலூர் புறநகர் பேருந்து திம்மூர் கொளக்காநத்தம் வரை நீட்டிப்பு செய்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வினை எளிதாக எதிர்கொள்ளப் பயன்படும் வகையில், கல்வியில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தனது சொந்த செலவில் தயாரிக்கப்பட்ட ”தேர்வை வெல்வோம்” என்ற வழிகாட்டி வினா விடை கையேடுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த வழிகாட்டி கையேட்டினை இலவசமாக போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கி வருகின்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 10ஆம் வகுப்பு பயிலும் 4,972 மாணவ மாணவிகளுக்கும், 11 ஆம் வகுப்பு பயிலும் 3,981 மாணவ மாணவிகளுக்கும், 12ஆம் வகுப்பு பயிலும் 4,129 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 13,082 மாணவ மாணவிகளுக்கு இந்த கையேடுகள் வழங்கப்படுகின்றது. கடந்த ஆண்டு இந்த கையேடு ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்ததோடு, அதிகப்படியான விழுக்காடு மாணவர்கள் தேர்வில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி உள்பட போக்குவரத்துத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.