Perambalur: Minister Sivashankar laid the foundation stone for a new classroom building worth Rs. 43.50 lakhs in Eraiyur under the MP Constituency Development Fund!
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் எம்.பி தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்ச மதிப்பில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு , பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி. ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது:
மாணவ சமுதாயங்கள் தான் நாளைய இந்தியாவையும், தமிழ்நாட்டையும் ஆள உள்ளனர். மாணவர்களின் கையில் தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம் உள்ளது. அதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி படிப்பினை தொடரும் மாணவ,மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. ஏழை, எளிய நடுத்தர மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் பாடப்பிரிவுகளுடன் பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கி தினந்தோறும் செய்தித்தாள்கள் வாசித்து பொதுவான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு இந்தியாவில் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அறிவித்து அதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 27 சதவீத மாணவ,மாணவிகள் மட்டுமே உயர்கல்வி பயின்று வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் எல்லாம் 50 சதவீதம் மாணவ,மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற முயற்சியினை ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், தமிழகத்தில் 52% மாணவ,மாணவிகள் ஏற்கனவே உயர் கல்வி பயின்று வருகிறார்கள். இதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான், அவர்தான் தமிழகத்தில் அதிக கல்லூரிகளை கொண்டு வந்ததால்தான் என்பதை அனைவரும் அறிவர்.
அதேபோல முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 8-ம் வகுப்பு படித்த அனைத்து பெண்களுக்கும் திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் அனைத்து பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளை எட்டாம் வகுப்பு படிக்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைத்தனர்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தற்போது 30 சதவீதம் கூடுதலாக மாணவிகள் உயர் கல்வி பயில்கிறார்கள். அதை நானே உணர்ந்து வருகிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வந்த மாணவ,மாணவிகள் தற்போது அதிகரித்துள்ளதால் போக்குவரத்து வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புதல்வன் என்ற திட்டத்தால் மாணவர்களும் உயர்கல்வி பயிலும் சதவீதம் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவ,மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு ஒரு மிகப்பெரிய கல்விப் புரட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார்கள். இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 90 சதவீத மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வார்கள் என்ற நிலையினை நாம் எட்டி இருப்போம். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உயர்கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டுவதற்குள் தமிழகத்தில் 90% மாணவ மாணவிகள் உயர் கல்வி பயில்வார்கள்.
இது போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டங்களை எல்லாம் மாணவ,மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டு முறையாக கல்வி பயில வேண்டும். ஏனென்றால் கல்வி என்பது தான் அனைவருக்கும் அடிப்படை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்வியை கொடுத்தால் அந்த சமூக முன்னேறும் என தெரிவித்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என பாடுபட்டார்கள். அதை தான் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அவரது வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் இவை அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு பள்ளி கட்டுவதற்கு ரூ.43.50 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார்கள். இந்த நிதியை கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்காக கொடுத்துள்ளார் என்பது ஒரு பாராட்டிற்குரிய செயலாகும். மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு நன்கு கல்வி கற்க வேண்டும். என பேசினார்.
எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீஸ்வரன், மதியழகன், ராஜேந்திரன், பெரியம்மாபாளையம் ரமேஷ், வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி வைஸ்- சேர்மன் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், எறையூர் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி ராம்குமார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வி.ஆர்.எம் அக்ரி மாதவன், கான்டிராக்டர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.