Perambalur: Panguni Uttara festival at Thandayuthapani Swamy Temple in Chettikulam; began with flag hoisting!
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களின் “அரோகரா அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.
விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், இரூர், பாடாலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, சத்திரமனை, மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் திருக்கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் இரவு தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை, சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
வரும் 9-ம் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம்,10-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், அலங்காரப்பல்லக்கிலும் சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 12-ம்தேதி மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடையும்.