Perambalur: Passengers stage protest as Chennai buses fail to enter bus stand at night!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த பொதுமக்கள் மீண்டும் சென்னை செல்ல துவங்கி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களையும் கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் சென்னை செல்வதற்காக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்தபோது திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் பெரம்பலூர் நகருக்குள் வந்து புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியில், உள்ள பிரதான சாலையில் சென்றது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் பயணிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியலில் போராட்ட முயன்றவர்கள் அதனை கைவிட்டனர். இதனால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து வழக்கம் போல பேருந்துகளில் பயணிகள் சென்னைக்கு பயணித்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனையிலும் அதிகாரிகள் பேருந்துகள் வருகை குறித்து உரிய பதில் அளிக்காததால் சுமார் அரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டதுடன், பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டு போடுவதற்கு சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் பணி செய்யும் நகரங்களுக்கு போக வாக்காளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

தேர்தல் ஆணையம் அடுத்த முறை தேர்தல் நடத்தும் பொழுது வாக்காளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கும் இடத்திலேயே எந்த தொகுதியாக இருந்தாலும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!