Perambalur: Property dispute: Brother arrested for slashing and killing younger brother with a sickle!
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வதிஷ்ட்டபுரம் கிராமத்தில் சொத்து பிரச்சனையில் தம்பியை அறிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
வதிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் – கருத்தமணி தம்பதியினர். இவர்களுக்கு வெங்கடேசன் (40), பெருமாள் (33) என்ற இரு மகன்களும், கஸ்தூரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசனுக்கு திருமணம் ஆகி, மனைவி நீலா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் தனுஷ் (12) சன்னாசி நல்லூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
வெங்கடேசன் தம்பி பெருமாள் இவரது மனைவி விஜி இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை. ஆதிமூலம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் இவர் எங்கே இருக்கிறார்? என்பது தெரியவில்லை. இவரது மனைவி கருத்தமணி பெருமாள் வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஆதி மூலத்திற்கு சொந்தமான நிலத்தை விற்பதற்கு பெருமாள் தனது அண்ணன் வெங்கடேசன் வசம் கேட்டுள்ளார். விற்பதற்கு கையெழுத்து போட வெங்கடேசன் ரூபாய் ஒரு லட்சம் பெருமாளிடம் இருந்து பெற்றுக் கொண்டு கையெழுத்து போடாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இன்று நண்பகல் சுமார் 12 மணியளவில் பெருமாள் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று பணம் வாங்கிக் கொண்டு ஏன் கையெழுத்து போட மறுக்கிறாய் எனக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் அரிவாளால் பெருமாளின் கழுத்து தலை கை கால் என பல இடங்களில் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெருமாளை திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில், பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வதிஷ்டபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.