Perambalur: Puthumai Pen Thittam; Extension to government aided schools!
புதுமைப்பெண் திட்டம் நடப்பாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படவுள்ளது குறித்து கல்லூரி நிர்வாகங்களுக்கு விளக்கும் வகையிலான கூட்டம் கலெக்டர் க.கற்பகம், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது
தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப் படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 3,976 மாணவிகள் மாதம் 1,000/ ரூபாய் பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுமைப்பெண் என்ற இந்த சிறப்பான திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மௌலானா உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி ஆகிய 05 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் இந்த புதுமைப் பெண் திட்டம் விரிவு படுத்துவதன் மூலம் பயனடையவுள்ளார்கள்.
கல்லூரி நிர்வாகம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மாதம் 1,000/ ரூபாய் பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரவேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும்.
அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட, அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்தவும் “தமிழ்ப்புதல்வன்“ என்னும் திட்டம் நடப்பு நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தகவல்களை 30.05.2024க்குள் ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் அறிக்கையாக சமர்ப்பித்திட வேண்டும். தகுதியுடைய அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் இத்திட்டங்கள் சென்று சேருவதை உறுதி செய்திட வேண்டும், என தெரிவித்தார்.
கல்வித்துறை, மாவட்ட சமூக நலததுறை பணியாளர்கள் உள்பட அனைத்து கல்லூரி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பலர் கலந்துகொண்டனர்.