பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் மகேஸ்வரன்(28). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னையன் மகள் சத்யா(26). மகேஸ்வரனும், சத்யாவும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
சத்யாவை திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தைகளை மகேஸ்வரன் கூறியுள்ளார். இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சத்யா கர்ப்பிணியாகி உள்ளார்.
இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான சத்யாவை திருமணம் செய்துகொள்ளமுடியாது என கூறி திட்டவட்டமாக மகேஸ்வரன் மறுத்ததோடு ஜாதிபெயரை கூறி திட்டியுள்ளார்.
இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம்தேதி சத்யா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மகேஸ்வரன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு சத்யாவை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த மகேஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் மகேஸ்வரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.