Perambalur: Road blockade in protest against the allocation of temple land as housing plots: A scuffle between the police and the public!

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் மானிய நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை கடந்த 2008 ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வகை மாற்றம் செய்து, வீட்டுமனை இல்லாத 150 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு தலா 2 சென்ட் வீட்டு மனைகளாக பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு இ- பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவில் உள்ள இடத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும் என ஆதிதிராவிட இன மக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட கோவில் நிலத்தை அளவீடு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குரும்பலூர் பகுதி பொதுமக்கள் கோவில் நிலத்தை கோவிலுக்கே திரும்ப வழங்க வேண்டும் என்றும், அதனை வீட்டு மனைகளாக பிரிக்க கூடாது என்றும் வலியுறுத்தி பெரம்பலூர்- துறையூர் சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்திய நிலையில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கியும், தரதர என இழுத்து சென்றும் வாகனங்களில் ஏற்றியும் கைது செய்தனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால், பெரம்பலூர்-துறையூர் சாலையில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பும் நிலவியது. கைது நடவடிக்கையின் போது இளம் பெண் ஒருவரை போலீசார் குண்டு கட்டாக தூக்க முயன்று, முடியாததால் அவரை தரையில் தரதரவென இழுத்துச் சென்ற போது அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி
என்பவர் நிலை தடுமாறி தரையில் விழுந்து எழுந்தார். இச்சம்பவத்தால் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.










kaalaimalar2@gmail.com |
9003770497