Perambalur: Rs. 2.11 crore for dredging of rivers, canals and streams; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, கீழக்குடிக்காடு கிராமத்தில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியின் கீழ் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அத்தியூர் ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும் 33 அணைக்கட்டுகளும் மற்றும் 5 ஆறுகளும் உள்ளன. கடந்த 06.03.2025 அன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அரசாணை 2டி இன் படி, காவேரி டெல்டா மாவட்டங்களில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆறுகள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும், தூர்ந்தும் உள்ள பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 பணிகளின் மூலமாக ரூபாய் 211 லட்சம் மதிப்பீட்டில் 39.50 கி.மி தூரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக கீழக்குடிகாடு கிராமத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் ஏரி வரத்து வாய்க்கால் 5,500 மீட்டர் நீளம் வாய்க்கால் தூர் வாரும்பணி தொடங்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் மு.பாண்டியன் உதவி பொறியாளர்கள் தி.தினகரன், கமலக்கண்ணன், பார்த்திபன், குன்னம் தாசில்தார் கோவிந்தம்மாள், நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.