Perambalur: Student Council Investiture Ceremony at Aadhav Public School!

பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 2026–2027 கல்வி ஆண்டிற்கான மாணவர் பேரவை பதவியேற்பு விழா, இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தலுடன் தொடங்கியது. மாணவர் பேரவை அணிவகுப்பு நடந்தது. மாணவர்களின் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்தியது.

பெரம்பலூர் மனவளக்கலை மன்றத்தின் சிறப்பு விருந்தினரான சுந்தர் சிறப்புரையாற்றினார். அப்போது “ஒரு மாணவர் நல்ல தலைவராக உருவாக வேண்டுமெனில் தன்னம்பிக்கை, மன ஒழுக்கம், நேர்மை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமை என்பது பதவி அல்ல; அது பொறுப்பும் சேவையும் ஆகும். நல்ல சிந்தனை மற்றும் உயர்ந்த பண்புகளுடன் செயல்படும் மாணவர்களே சமூகத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக முடியும்” என பேசினார்.

பின்னர் நடந்த பதவியேற்பு விழாவில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சாஷ்கள் அணிவிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பள்ளியின் நற்பெயரைக் காக்கவும், நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையுடன் செயல்படவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பள்ளியின் தாளாளர் பூமாபிரியா பேசியதாவது: ஒரு நல்ல தலைவர் அதிகாரத்தால் அல்ல, பண்பாலும் சேவை மனப்பான்மையாலும் உருவாகிறார். மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், தலைமைத்துவம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பிலும் சிறந்து விளங்க வேண்டும். இன்றைய மாணவர் தலைவர்கள் நாளைய நாட்டின் சிறந்த நிர்வாகிகளாக உருவாக வேண்டும்” என பேசினார்.

பள்ளி முதல்வர் சித்ரகலா பேசியதாவது: பள்ளி வழங்கும் பொறுப்புகளை மாணவர்கள் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி, மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒழுக்கம், நேரம் தவறாமை, குழு ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதே உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம்” என தெரிவித்தார். பள்ளி விளையாட்டு துறை இயக்குநர் பிரணவ் பேசியதாவது: விளையாட்டு மனப்பான்மை, ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகிய பண்புகளே ஒரு தலைவரின் வெற்றிக்கான அடித்தளமாகும். மாணவர் தலைவர்கள் அனைவரையும் சமமாக வழிநடத்தி, பள்ளியின் ஒழுக்கத்தையும் மரியாதையையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்” என கூறினார். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!