Perambalur: Subsidized urea meant for farmers is being smuggled to other states and sold at higher prices; Raja Chidambaram, State Secretary of the Tamil Nadu Farmers’ Association, has submitted a petition seeking action.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் கலெக்டர் ஷரண்யாவிட் கொடுத்த மனுவில தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே யூரியா உரம் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உரம் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில் தமிழகத்தில் சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் யூரியா உரம் தேவைக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் சந்தேகம் அடைந்த டெல்லியில் உள்ள அதிகாரிகள் சென்னையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு நேரில் ஆய்வு நடத்த கோரியதை தொடர்ந்து அதிகாரிகள் பெரம்பலூருக்கு வந்து ஆய்வு செய்து 49 சில்லறை விற்பனை கடைகளில் உர விற்பனைக்கு தற்காலிக தடைவிதித்துள்ளனர்.
ஆனால், இதற்கு முக்கிய காரணமான மொத்த உர விற்பனையாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மொத்த உர விற்பனையாளர்கள் தங்களது பெயரிலும் தங்களது உறவினர்கள் பெயரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட உர விற்பனை உரிமத்தை வைத்துக் கொண்டு அதிகளவில் உரத்தை கொள்முதல் செய்து சில கடைகளில் உர விற்பனை நடைபெறாமலேயே அங்கு உரம் விற்பனை நடந்தது போன்று கணக்குக் காண்பித்தும், உரம் விற்பனை செய்யும் சில கடைகளில் விவசாயிகள் ஒரு மூட்டை உரம் வாங்கினால் அவர்கள் அதிக அளவில் உர மூட்டைகள் வாங்கியது போன்று அவர்களிடத்தில் கைரேகையை பெற்றும் இங்குள்ள சில வேளாண்துறை அதிகாரிகள் சிலரின் துணையோடு உரம் மோசடி செய்து அந்த உரத்தை கேரளாவிற்கும், கோவைக்கும் ஏற்றுமதி செய்து அங்கு அதிக விலைக்கு உரத்தை விற்றதாக தெரிய வருகிறது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா அதிக அளவில் விற்பனை நடைபெறுவது டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்து அவர்கள் இங்கு ஆய்வுக்கு வந்துள்ள நிலையில் நமது மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை அதிகாரிகள் முன்பே இது சம்பந்தமாக ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை. திருச்சி கள்ளக்குறிச்சி அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மொத்த உர விற்பனையாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் சில இடங்களில் உர விற்பனை உரிமத்தை பெற்று வைத்துக்கொண்டு அங்கு தினந்தோறும் சில்லறை உர விற்பனை செய்யாமல் உரத்தை மொத்தமாக வியாபாரிகளிடத்தில் விற்பனை செய்வதாகவும் தெரிகிறது. இது தொடர்பாகவும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய உரத்தை கேரளாவிற்கு எடுத்துச் சென்று விற்ற மொத்த விற்பனையாளர்கள் குறித்தும் இதற்கு துணை போன வேளாண்துறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
ஒவ்வொரு மாதமும் உர மொத்த விற்பனையாளர்கள், உர உற்பத்தியாளர்கள், வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இக்கூட்டத்தில் அதிக அளவில் யூரியா உர விற்பனை செய்திருப்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருந்தாலே இந்த உர மோசடியை தடுத்திருக்க முடியும். அதனால் இனியாவது ஒவ்வொரு மாதமும் முத்தரப்பு கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை மாவட்ட ஆட்சியருக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் மேல் கூட்டத்திலும் வேளாண் துறை அதிகாரிகள் தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497