Perambalur: Tamil Nadu Farmers’ Association State Secretary Raja Chidambaram has filed a complaint with the Collector seeking action against buses charging extra fares!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் விரைவு பேருந்துக்கான கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரியும், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல கோரியும் 08.09.25 அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு.

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி, ஆத்தூர், துறையூர் போன்ற முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள், அனைத்து பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்றாலும் அந்த பேருந்துகளில் (LSS கட்டணம்) விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதுவும் குறிப்பாக பேருந்துகளில் அதிகமாக மக்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பயணிக்கும் காலை நேரங்களிலும் அதேபோன்று பள்ளிக் கல்லூரிகள் மற்றும் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாலை வேலைகளிலும் சாதாரண பேருந்துகளில் கூட விரைவு பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

அதேபோன்று முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலும் சாதாரண பேருந்துகளில் விரைவு பேருந்துக்கான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இது குறித்து நடத்துனர்களிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் நாங்கள் என்ன செய்வது நிர்வாகத்தில் வசூலிக்க சொல்கிறார்கள் என்று நடத்துனர்கள் பதில் அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை திடீர் ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டண வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

மேலும், கடந்த காலங்களில் அரசு பேருந்துகளில் சாதாரண பேருந்துகள் எது விரைவு பேருந்துகள் எது என பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் சாதாரண பேருந்தின் வழித்தட பெயர் பலகை மஞ்சள் நிறத்திலும் விரைவு பேருந்தின் வழித்தட பெயர் பலகை வெள்ளை நிறத்திலும் இருக்கும்.மேலும் விரைவு பேருந்துகளில் LSS என குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை பார்த்து மக்கள் எளிதில் புரிந்து கொண்டு அவர்கள் பயணிக்க ஏதுவாக இருந்தது. அதே போன்று தற்போது சாதாரண பேருந்துகள் எவை விரைவு பேருந்துகள் எவை என்பதை பொதுமக்களுக்கு எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் எந்தெந்த நேரத்தில் எந்த ஊருக்கு இயக்கப்படுகிறது என்ற அறிவிப்பு பலகையை வைத்து, அந்த அறிவிப்பு பலகையிலும் சாதாரண பேருந்து,விரைவு பேருந்து என வகை படுத்தி பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் குறிப்பிட வேண்டும்.

அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், பேருந்துகளின் உட்புறத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பேருந்து நிறுத்தம் உள்ளது என்பது பற்றியும் (ஸ்டேஜ் உள்ளது) அந்த ஊர்களுக்கான கட்டண விபரத்தினையும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.

பெரம்பலூரில் இருந்து திருச்சி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நாரணமங்கலம், நெடுங்கூர், பி,கே.அகரம், கொணலை போன்ற கிராமங்களில் பேருந்து நிருத்தம் (ஸ்டேஜ்) இருந்தும் அங்கு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதில்லை‌.

அதேபோன்று தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ள சிறுவாச்சூர், நாரணமங்கலம், பாடாலூர் கிராமங்களில் பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக கிராம பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்காமல் பாலத்தின் மேல் வழியாகவே செல்வதால் பயணிகள் தாங்கள் குறித்த நேரத்திற்கு செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுபோன்று பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்லாமலும், கிராம பேருந்து நிறுத்தத்திற்கு செல்லாமல் பாலத்தின் மேற்புறமாக செல்லும் அரசு மற்றும் தனியார். பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து இடங்களிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசு பேருந்துகள், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றனவா என்பதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் பரிசோதர்களை கொண்டு ஆய்வு செய்து அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலும் சத்திரம் பேருந்து நிலையத்திலும் பேருந்தில் ஏறும் பயணிகளை தனியார் மற்றும் அரசு பேருந்து நடத்துனர்கள் திருச்சி, சமயபுரம், பாடாலூர், பெரம்பலூர் என முக்கிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மட்டும் பேருந்தில் ஏறிக் கொள்ளவும் எனவும், மற்ற கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து புறப்படும் போது ஏறிக் கொள்ளவும் எனவும், கிராம மக்களை திட்டி அச்சுறுத்தி கீழே இறக்கி விடுகின்றனர். இதனால் வயதானவர்கள் பெண்கள் பேருந்தில் பணம் கொடுத்து பயணித்தாலும் நிம்மதி இன்றி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பேருந்து புறப்படும் வரை கீழே காத்து நிற்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி அனைத்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளையும் சமமாக நடத்தி பயணிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேருந்தில் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம், என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது நாரணமங்கலம் கோவிந்தராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!