Perambalur: Tamil Official Language Law Week Awareness Rally: Inaugurated by the Collector!

பெரம்பலூர் பாலக்கரையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்பு பிரதிநிதிகளின் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி என 1956 இல் சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டுமென அரசு ஆணையிட்டு 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனை நினைவு கூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும், 18.12.2024 முதல் 27.12.2024 வரை கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் தமிழ்ச்செம்மல் விருதாளர்கள், வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், லாடபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவைகளைச் சேர்ந்த 280 பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை இசையுடன் மாணவர்கள் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

     பேரணியில் கலந்து கொண்டவர்கள் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" "அன்னைத் தமிழே ஆட்சி மொழி" "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" "இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டுவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

இப்பேரணியானது பாலக்கரை பகுதியிலிருந்து, சங்குபேட்டை பழைய பேருந்து நிலையம் வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வுகளில், தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதிநிதிகள், தமிழ் அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!