Perambalur: Teachers should increase student enrollment and pass rate in government schools; Collector instructs!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

குறிப்பாக 2023-2024ஆம் கல்வியாண்டில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள மேல்நிலைப் பள்ளிகளான வி.களத்தூர், கொளக்காநத்தம், காரை, குன்னம், கீழப்புலியூர், அரும்பாவூர் பசும்பலூர், பாடாலூர், நக்கசேலம் செட்டிக்குளம், எளம்பலூர், பேரளி, கீழப்புலியூர், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி களரம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளிகளான கொளத்தூர், காடூர், நன்னை, அசூர், லாடபுரம், தெரணி, தொண்டைமாந்துறை, அரசு ஆதிதிராவிடர் நல உநி.பள்ளிகள் ஆலாம்பாடி, பொம்மனப்பாடி மற்றும் ஈச்சம்பட்டி ஆகிய பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் உத்திகள் சார்ந்தும் ஆய்வு செய்த கலெக்டர், 12 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திலும், 10 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடத்திலும் அதிகப்படியான மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கான காரணங்கள், மாணவர்கள் தேர்ச்சியை அதிகப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் விரிவாக ஆய்வு செய்தார்.

பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடிக் கல்வி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாயும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாயும் வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் முதல் கல்வி கற்பித்தல் வரை முழுமையாக இலவசமாகவும், தரமாகவும் வழங்கப்படுவதை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பெற்றோர்கள், மாணவர்களிடம் எடுத்துரைத்து நடப்பு கல்வியாண்டில் அதிக அளவில் மாணவ மாணவியர் சேர்க்கைகளை அதிகப்படுத்திட வேண்டும்.

மேலும், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து எந்த வகையான சூழ்நிலையில் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை முழுமையாகக் கண்டறிந்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி, தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்திட வேண்டும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஆய்வு செய்து மீள்திறன் குறைந்த மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்திட முன் வரவேண்டும்.

வரும் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தவும், இடைநின்ற மாணவர்கள் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வர வைத்தல் மற்றும் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தினை அதிகப்படுத்துதல் வேண்டும். தற்பொழுது கோடைகால விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள், புதிய கட்டிடப் பணிகள் மற்றும் இதர பணிகளை பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து, பள்ளி வளாகங்களை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் மேற்கொள்வதற்கு தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும், என தெரிவித்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.முருகாம்பாள், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ம.செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) பெ.அய்யாசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளி) கீ.லதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் க.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!