Perambalur: Thaipusam festival advisory meeting in Chettikulam; Devotees, public heated argument with officials!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் புகழ் பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா வரும் பிப்ரவரி 3 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11 ம் தேதி நடக்க உள்ளது. 12 ம் தேதி மாலை தேர் மீண்டும் நிலைக்கு வரும். இதனையொடடி நேற்று ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூச திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி தலைமை நடந்தது.
கூட்டத்தில் செட்டிகுளம் கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் கூடினர். இக்கோயில் திருவிழாவின் போது 2 தேர்கள் இழுப்பது வழக்கம். இதில் பெரிய தேர் கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நடந்த பிறகு பழுது ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக வேறொரு கோயிலில் உள்ள சப்பரம் கொண்டு வந்து தேரோட்டத்தை நடத்தலாம் என செயல் அலுவலர் பொதுமக்களிடம் தெரிவித்தார். அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் பெரிய தேர் பழுதாகி ஓராண்டு ஆகிறது. உடனடியாக சரி செய்திருக்கலாம் என கோயில் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சுமார் ரு.40 லட்சம் வரை செலவாகும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஒருவருக்கொருவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் கோயில் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கிராமத்தினர் தைப்பூசத் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் பழுதான பெரிய தேரை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.