Perambalur: The 165th anniversary of the Palayam St. Susaiyappar Church began today with the flag hoisting!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த இந்த பங்கு கோவிலின் 165வது ஆண்டு பெருவிழா மற்றும் தேர்த் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்கு குரு ரெஜீஸ் தலைமையில், தேர்பவனி நடைபெறும் முக்கிய வீதிகளில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் பங்குகுரு ரெஜீஸ் தலைமையில், மண்ணின் மைந்தர் டேவிட் முன்னிலையில், பாபநாசம் பங்குகுரு மரிய பிரான்சிஸ் கலந்துகொண்டு, புனித சூசையப்பர் கொடியை மந்தரித்து, புனிதப் படுத்தி, கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். விழாவில் கிராம காரியஸ்தர்கள், புனித ஆர்.சி நடுநிலைப்பள்ளி அருட் சகோதரிகள், அன்பியம் குழுவினர், இளைஞர் மன்றத்தினர், பாளையம் கிராம கிறிஸ்தவப் பொது மக்கள் மட்டுமின்றி பெரம்பலூர், குரும்பலூர், ரெங்கநாதபுரம், சத்திரமனை, புதுநடுவலூர், வேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இறை மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று 2ஆம்தேதி முதல் வருகிற 7ஆம் தேதி வரை தினமும் மாலையில் பல்வேறு அன்பியம் குழுவினரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பல்வேறு வெளியூர் பங்கு குருக்கள், மண்ணின் மைந்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் மறைவுரையுடன் சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். வருகிற 8 ஆம் தேதி இரவு அலங்கார சப்பர பவனியும் 9ஆம் தேதி இரவு ஆடம்பர தேர் பவனியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நாளான 9ஆம் தேதி இரவு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெறுகிறது. 10ஆம்தேதி ஞாயிற்றுக் கிழமை காலை திருவிழா திருப்பலி முடிந்து, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.











kaalaimalar2@gmail.com |
9003770497