Perambalur: The Masimaga festival at Brahmapureeswarar Temple began with the hoisting of the flag!
பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருந்திருவிழா நடந்துவருகிறது. நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜை நடந்தது.
நேற்று கொடி ஏற்ற நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மூலவருக்கும், அம்பாளுக்கும் பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பால், பழங்கள், அபிசேகங்களும் கொடிக்கு சிறப்பு பூஜையும், அலங்கார மண்டபத்தில் ஆனந்தவல்லி, சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.
பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் முல்லை, கவுரிசங்கர் மற்றும் சதிஷ், செங்கோட்டு வேலன் சிவாச்சாரியார் குழுவினர் செய்திருந்தனர், சிவாச்சாரியார்கள் நடத்திவைத்தார். கொடிஏற்ற விழாவில் பிராமணர் சங்க மாவட்ட தலைவர் கொளக்காநத்தம் ராமச்சந்திரன் அய்யர், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் சஞ்சீவி, கோவில் முன்னாள் அறங்காவலர்கள் வள்ளிராஜேந்திரன், பூக்கடை சரவணன், வைத்தீஸ்வரன், ஆன்மீக பேச்சாளர் கேசவராஜசேகரன் மகேஸ்வரன்,பழனியப்பன்,ராஜமாணிக்கம், தர்மராஜன்,குமார் சரவணன்.மற்றும் தின,வார வழிபாட்டு குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
திருவிழாக்கள் விபரம்: இன்று (புதன்கிழமை) 2-ஆம் திருவிழா சிம்மவாகனம். நாளை (வியாழக்கிழமை)- சேஷவாகனம். மார்ச்.7-ந்தேதி- சூரியபிரபை வாகனம்,சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 8-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. 9-ந்தேதி யானைவாகனம், 10-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், அதனைத்தொடர்ந்து புஷ்பகவிமானத்தில் சுவாமி புறப்பாடு, 11-ந்தேதி கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் இம்மாதம் 12-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9மணி முதல் 10.30மணிக்குள் தேரோட்டம் வடம்பிடித்தல் தொடங்குகிறது. அன்று மாலை தேர்நிலையை அடைந்தவுடன் வண்டிக்கால் பார்த்தல் உற்சவமும், நடராஜர் வழிபாடும் நடக்கிறது.
13-ந்தேதி கொடிஇறக்கமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 14-ந்தேதி ரிஷபவாகனத்தில் சுவாமி திருவீதிஉலாவும் நடக்கிறது. 15-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 16-ந்தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. மார்ச்.18-ந்தேதி திருத்தேர் 8-ஆம் திருவிழா நடக்கிறது. அன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியுடன் மாசிமகதிருவிழா நிறைவு அடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை பெரம்பலூர் உதவி ஆணையர் மற்றும் தக்கார் உமா, கோவில் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்துள்ளனர்.