Perambalur: Vacancies for cooking assistant posts for women on a lump sum basis; Collector announces!
பெரம்பலூர் மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 73 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.3,000/- என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட (12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay- ரூ.3000-9000) தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இனசுழற்சி வாரியான காலிப்பணியிடம் அரசு மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் 65, இனசுழற்சி அல்லாத காலிப் பணியிட விவரம் சிறுபான்மை பள்ளிகள் 08, மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 73
விண்ணப்பதாரர்கள் அனைவரும் 11.04.2025-ம் தேதியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) 11.04.2025-ம் தேதியில் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணியிடங்கள் அரசு விதிமுறைகளின் படியும், நீதிமன்ற ஆணைக்குட்பட்டும் நிரப்பப்படும். கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமைகள் கோருவதற்கான சான்றுகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே, பணியில் இருப்பவர்கள் மேற்காணும் பதவிக்கான அனைத்து தகுதிகளும் பெற்றிருப்பின் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அலுவலர் மூலமாக விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தின் முன் நகலினை பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சத்துணவுப் பிரிவு) அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ, பதிவஞ்சலிலோ அனுப்பவேண்டும். நியமனம் கோரும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி, குக்கிராமம்,வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.)
மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை(நிலை) எண்.32, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-2) துறை, நாள் 12.03.2025-ன் படி, கீழ்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது. குறைவான பார்வைத்திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது), உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40சதவிகிதம் கைகளின் முழு செயல்பாட்டுதிறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது), திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)
இனசுழற்சி அல்லாத மற்றும் இனசுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட உள்ள மொத்த பள்ளி சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களின் விபரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் பெரம்பலூர் மாவட்ட இணையதளத்தில் https://perambalur.nic.in வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, இணையதளத்திலிருந்து சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (உரிய விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.) காலிப்பணியிடங்களின் விவரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் அலுவலக விளம்பர பலகையிலும் அறிவிப்பு செய்யப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இருப்பிட சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிசான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ் மற்றும் மாற்றுதிறனாளிக்கான சான்று நகல்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 15.04.2025 முதல் 29.04.2025 மாலை 5.45-க்குள் அனுப்பிட வேண்டும். (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) 29.04.2025 தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது.
நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் பின்னர் அனுப்பப்படும். நேர்காணலுக்கு வரும்பொழுது அசல் நேர்காணல் அழைப்புக் கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாது கொண்டு வந்து கலந்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.