Perambalur: Vaccination camp for calf-killing disease that can be transmitted from cattle to humans; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் பிப்.20 முதல் மார்ச்.19 வரையிலான 28 நாட்கள் தொடர்ந்து புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் மூலமாக 5-வது கட்ட புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இத்தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்பட உள்ளது. இதனை ஒரு முறை செலுத்திக்கொண்டால் கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதும் இக்கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் இத்தடுப்பூசி செலுத்தக்கூடாது.
இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய உலகளாவிய ஒரு தொற்று நோயாகும். இது புருசெல்லா அபார்ட்டஸ் எனும் நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது. இக்கிருமி பெரும்பாலும் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது. பல வகையான புருசெல்லா நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது பொது சுகாதாரத்திற்கும் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக உள்ளது. கன்று வீச்சு நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உற்பத்தி திறன் குறைவு மற்றும் சினைபிடிக்காமை காணப்படும். இந்நோய் பெரும்பாலும் மாடு, ஆடு, எருமை, யாக், ஒட்டகம், நாய், குதிரை மற்றும் பன்றிகளை தாக்குகின்றது. வெள்ளாடுகளில் புருசெல்லா மெலிட்டென்சிஸ், மாடுகளில் புருசெல்லா அபார்ட்டஸ், நாய்களில் கேனிஸ், பன்றிகளில் புருசெல்லா குயிஸ் கிருமிகள் தாக்கும். மேலும் நான்கு வகை கிருமிகளும் மனிதர்களுக்கும் பரவும்.
நோய் அறிகுறிகள் மனிதர்களிலும் மற்றும் விலங்குகளிலும் மாறுபட்டு காணப்படும். இந்நோயினால் மனிதர்களுக்கு அதிக காய்ச்சல், குளிர், உடல் வலி, தலைவலி, மனச்சோர்வு, சோம்பல், பசியின்மை, எடை குறைதல், வயிறு, மூட்டு, முதுகு பகுதிகளில் வலி மண்ணீரல் / கல்லீரல் வீக்கம் மற்றும் எடை குறைவு ஆகியவை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உணவு உட்கொள்ளாமை, பால் உற்பத்தி குறைதல், சினைபிடிக்காமை, கன்று வீச்சு மற்றும் விரை வீக்கம் காணப்படும்.
மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கவனமாக கையாள வேண்டும். சமைக்கப்படாத மாமிசம் மற்றும் பதப்படுத்தப்படாத பாலை உட்கொள்ளக்கூடாது. கால்நடைகளில் தடுப்பூசி செலுத்தி இந்த நோயினை தடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை தடுக்கலாம். செயற்கைமுறை கருவுருதலுக்கு பயன்படும் காளைகளை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். கால்நடைகளில் உரிய உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கன்றுவீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்த பால் மற்றும் பால் பொருட்கள், நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி பொருட்களை உட்கொள்ளுதல் வேண்டும்.
விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விபரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையத்ததை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம் போடும் நாட்களில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.