Perambalur: “Vote for Minister Sivasankar, who made the entire nation turn and take notice!” — Deputy Chief Minister Udhayanidhi Stalin campaigns.

குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவசங்கரை ஆதரித்து, நேற்று மாலை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது:
முதலில் சிறப்பான, அன்பான, எழுச்சியான, உற்சாகமான வரவேற்பு கொடுத்திருக்கக்கூடிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று குன்னம் தொகுதியில் உங்களை சந்திக்க வருகை தந்துள்ளேன்.
இந்த மண்ணின் மைந்தர், உங்களின் நாடாளுமன்ற உறுப்பினர், எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்களின் மாவட்டத்தில், அவரில் தொகுதியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஐ.ஜே.கே கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுபதி அவர்கள், மகளிர் அணி அமைப்பாளர் சுதா உள்ளிட்டோர் இன்று கழகத்தில் இணைகிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும், அவர்களோடு வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்று இந்த குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வாக்கு கேட்டு உங்களையெல்லாம் நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்பதற்காகத் தலைவர் அவர்கள் என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்ததற்குப் பிறகு நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து வைத்துள்ளீர்கள் என்று தெரிகிறது.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அண்ணன் சிவசங்கர் அவர்களை சென்ற முறை 6,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். இந்த முறை குறைந்தது 50,000 வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் சிவசங்கர் அண்ணனை வெற்றிபெற வைக்க வேண்டும். ஒரு சிறந்த வேட்பாளர், வெற்றி வேட்பாளரை உங்களிடத்தில் ஒப்படைத்துள்ளார் தலைவர். தலைவர் அவர்கள் அண்ணன் சிவசங்கர் அவர்களை அழைக்கும்போது ‘அரியலூரின் அரிமா’ என்றுதான் அழைப்பார்.
கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பேருந்துகள் எல்லாம் ஓட்டை உடைசல் டப்பா பேருந்துகளாக இருந்தன. அந்த டப்பா பேருந்துகளை எல்லாம் மாற்றி இன்று புதிய பேருந்துகளாக மாற்றிக்கொண்டு வருபவர்தான் நம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அண்ணன் சிவசங்கர் அவர்கள்.
தமிழ்நாடு முழுதும் புதிய பேருந்து ஓடுகிறது, குளிர்சாதனப் பேருந்து ஓடுகிறது, புதிதாக வரும் பேருந்துகள் எல்லாம் வெளிநாட்டில் ஓடும் பேருந்துகளைப் போலப் பளபளவென்று நவீனமாக இருக்கின்றன என்றால், குக்கிராமங்களுக்குக் கூட இன்று அரசுப் பேருந்து சேவை செய்து கொடுத்திருக்கிறோம். இப்படித் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையை இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு துறையாக மாற்றி வைத்துள்ளவர்தான் நம் அமைச்சர் அண்ணன் சிவசங்கர் அவர்கள்.
அந்த வெற்றி வேட்பாளருக்கு உங்களைப் பார்த்து வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கட்சிப் பணி, ஆட்சிப் பணி, மக்கள் பணி எதுவாக இருந்தாலும் எதுவுமே உழைப்பு, உழைப்பு, உழைப்பு, எந்த நேரமும் மக்கள் பணி, ஓர் அருமையான களப் பணியாளர்தான் அண்ணன் சிவசங்கர் அவர்கள். அப்படிப்பட்ட சிவசங்கர் அவர்களுக்கு மீண்டும் நீங்கள் குன்னம் தொகுதியில் வெற்றி பெற வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று அண்ணன் சிவசங்கர் அவர்களை அழைத்துக்கொண்டு நான் உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன் என்றால், இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த குன்னம் தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை அண்ணன் சிவசங்கர் அவர்கள் கொண்டு வந்துள்ளார், அந்தத் திட்டங்களையெல்லாம் உங்களிடம் சொல்லி உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
புஜங்கராயநல்லூர், ரசலாபுரம் இடையே மருதையாற்றின் குறுக்கே 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று உயர்மட்டப் பாலம் அமைத்திருப்பது அண்ணன் சிவசங்கர் அவர்கள். கூடலூர், ஜமீன் பேரூர் இடையே மருதையாற்றின் குறுக்கே 12 கோடி ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம் அமைத்துக் கொடுத்தது அண்ணன் சிவசங்கர் அவர்கள்.
வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் உள்ள ஊர்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுத்திருப்பது அண்ணன் சிவசங்கர் அவர்கள். வெண்மணியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டிருப்பது அண்ணன் சிவசங்கரின் முயற்சி.
குன்னம் மற்றும் செந்துறையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து பணிமனைகள், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செந்துறை அரசு மருத்துவமனைக் கட்டடம், செந்துறையில் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம், செந்துறை ஒன்றியத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கிராமச் சாலைகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காரையில் புதைபடிமப் பூங்கா, 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேப்பூர் அரசு கல்லூரிகளுக்கான மாணவிகள் விடுதி, 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குள்ளக்காந்தத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வந்துள்ளது.
இப்படிப் பல்வேறு திட்டங்களை உங்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று உங்களையெல்லாம் நாடித் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். செய்த திட்டங்களையும் சொல்லியிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு என்னென்ன செய்யப்போகிறோம் என்பதையும் சொல்லி வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
அத்தியூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
நொச்சிக்குளம் ஊராட்சியில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை. இழுப்பைக்குடிக்காட்டில் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று கோரிக்கை. இலுப்பைக் குடிக்காட்டில் இளைஞர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று ஒரு கோரிக்கை. அகரம், சீசூர் ஊராட்சியில் உள்ள ஓர் ஏரியைத் தூர்வாரி மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை.
பேரளி ஊராட்சி, மருவத்தூரில் உள்ள ஏரியைத் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை. ஆதனக்குறிச்சி, தளவாய் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை. மாரக்குறிச்சி கிராமத்தில் மயானத்துக்குச் செல்லச் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கை. இத்தனை கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் அண்ணன் அவர்களை வெற்றி பெற வைத்துச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் இந்த அத்தனை கோரிக்கைகளையும் உடனடியாகச் செய்து கொடுப்போம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நம் முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் உங்களுக்குச் செய்து கொடுப்பார்.
இன்று நான் தினமும் மக்களைச் சந்திக்கிறேன். நம் தலைவர் ஒரு பக்கம் ஒவ்வொரு தொகுதியாகப் போய் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றியிருக்கிறோம், செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையில் அந்த நம்பிக்கையில் இன்று மக்களைச் சந்திக்கச் செல்கிறோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் கொடுத்த முக்கியமான வாக்குறுதி. மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துத் திட்டம். ஆட்சி அமைந்த உடனே நம் முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விடியல் பயணத் திட்டம். இன்று மகளிர் ஒவ்வொருவரும் மாதந்தோறும் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளார்கள்.
பிள்ளைகள் பள்ளிக்கு வர வேண்டும், பசியோடு படிக்கக் கூடாது என்று நம் முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதுதான் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். இன்று ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும், கிட்டத்தட்ட 20 லட்சம் குழந்தைகளுக்குக் காலையில் பள்ளிக்கு வந்தார்கள் என்றால் முதலில் தரமான உணவு, அதன் பிறகு தரமான கல்வியைக் கொடுத்துள்ளோம்.
சரி, பள்ளிக்கூடத்துக்கு வர வைத்துவிட்டோம், கல்லூரிக்குப் போக வைக்க வேண்டும். அதற்காக நம் முதலமைச்சர் கொண்டு வந்ததுதான் கல்வி உதவித்தொகைத் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சென்று சேர்ந்தாலும், தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கல்வி ஊக்கத்தொகையாக 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் கொடுத்துள்ளார். 13 லட்சம் மாணவ மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளார்கள்.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் மூன்று லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் கொடுத்துள்ளோம். இப்பொழுது சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னால் 10 லட்சம் மடிக்கணினிகளைக் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கொடுத்துள்ளோம். இன்று அ.தி.மு.க ஒரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கிறது, அ.தி.மு.க கொண்டு வந்ததுதான் அந்தத் திட்டம், அதை முடக்கிவிட்டோம் என்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மடிக்கணினி பள்ளிக்கூடம் படிக்கிற குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். 2019-இல் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.
நம் முதலமைச்சர் பார்த்தார், இந்த மடிக்கணினி யாருக்கு அதிகப் பயனுள்ளதாக இருக்கும்? கல்லூரி மாணவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பொழுது 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினி கொடுத்துள்ளோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைக் கொடுத்து வருகிறோம். அந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் சூழ்ச்சி செய்தன. ஆனால் நம் தலைவர் என்ன செய்தார்? பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000, கோடைகால சிறப்பு நிதி 2,000 என 5,000 ரூபாய் நம் தலைவர் ஒரே தவணையில் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்குக் கொடுத்தார்.
இப்பொழுது நம் தலைவர் மீண்டும் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளார். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரைக்கும் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். மீண்டும் இந்த ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
முதியோர் உதவித்தொகை 1,200 இல்லை, உயர்த்தி 2,000 ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம். கல்வி உதவித்தொகை 1,000 இல்லை, 1,500-ஆக உயர்த்தி கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு எந்தவிதப் பிணையமும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
இன்னொரு முக்கியமான வாக்குறுதி கொடுத்துள்ளோம், உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மகளிருக்கும் ஆட்சி அமைந்தவுடனே, நம் முதலமைச்சர் 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கூப்பன் கொடுத்துவிடுவார். அந்த கூப்பனை வைத்து மகளிர் அவர்கள் வீட்டுக்கு என்ன தேவையோ, மின்சாதன வசதி என்ன தேவையோ அதை அவர்களே முடிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால், மீண்டும் நம் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப்போவது உறுதி. ஆட்சி அமைந்தவுடனே நான் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நம் தலைவர் செய்து கொடுப்பார். அடுத்த 17 நாட்கள் இந்த பிரச்சாரத்தை நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்.
நீங்கள் இந்தப் பிரச்சாரத்தை ஒவ்வொரு வாக்காளராகச் சந்தித்து இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். ஒவ்வொரு தெருவாகச் செல்லுங்கள், ஒவ்வொரு வீடாகச் செல்லுங்கள், ஒவ்வொரு வாக்காளராகச் சந்தித்து ஏன் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைய வேண்டும், ஏன் நம் தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமர வேண்டும், அடிமைக் கூட்டத்தை, பாசிசக் கூட்டத்தை, சங்கிக் கூட்டத்தைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது என்கிற பிரச்சாரத்தை நீங்கள் செய்யுங்கள்.
இந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன செய்துள்ளோம், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சொல்லியுள்ளேன். இவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்ததனால்தான் இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் முதன்மை மாநிலமாக நாம் இடம்பிடித்துள்ளோம். 11.19 சதவிகித வளர்ச்சியோடு இன்று இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் நம் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
அதனால்தான் இன்று நம் தலைவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், வரும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணி மற்றும் தமிழ்நாடு அணி இடையிலானது. இதில் டெல்லி அணியைத் தமிழ்நாடு அணி – நாம் வென்றுக் காட்ட வேண்டும். டெல்லி அணி என்று சொல்கிறேனே, அந்த அணியில் யார் யார் இருக்கிறார்கள்? மோடி. மோடியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அடிமைக் கூட்டம், இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க அடிமைக் கூட்டம் கூட்டணி வைத்துக்கொண்டு வருகிறார்கள்.
நாம் முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம், முரட்டுத் தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்போம், எங்கேயாவது முரட்டு அடிமையை பார்த்திருக்கிறீர்களா? இன்று இந்தியாவிலேயே மோடியின், முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான். இதைச் சொன்னதற்குத்தான் கோபித்துக்கொண்டார்.
என்ன தெரியுமா சொல்கிறார்? “உதயநிதிக்கு எந்த அனுபவமும் கிடையாது”. ஆமாம், அவர் வயதுக்கு என் அனுபவம் ஒன்றும் கிடையாதுதான். நான் சின்னப் பையன்தான். அந்த அனுபவம் எனக்கு நிச்சயமாகக் கிடையாதுதான். பதவிக்காக யார் காலிலும் விழுந்த அனுபவம் எனக்குக் கிடையாது. என்றைக்குமே மக்களோடு மக்களாக நிற்கிற அனுபவம்தான் என் அனுபவம்.
முதலில் ஜெயலலிதா அம்மா காலில் விழுந்தார். அதன்பிறகு அந்த அம்மா இறந்த பிறகு சசிகலா அம்மா கால். சசிகலா அம்மா சிறைக்குச் சென்றவுடனே டி.டி.வி தினகரன் காலில். பிறகு அவரை வாரி விட்டுவிட்டு அண்ணன் ஓ.பி.எஸ் கால். இப்பொழுது ஓ.பி.எஸ் நம் அணிக்கு வந்துவிட்டார். இப்பொழுது அவரை விட்டுவிட்டு டெல்லிக்குச் சென்று மோடி காலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
இப்பொழுது எங்கு சென்றாலும் என்னை விமர்சனம் செய்கிறார். இன்று காலையில்கூடப் பேசிவிட்டார், என்ன தெரியுமா சொல்லியிருக்கிறார்? என் பெயரைச் சொல்லியே சொல்கிறார், “மேலோகத்துக்குப் போயிருக்க வேண்டியவர் இங்கு இருந்து என் உயிரை எடுக்கிறார் உதயநிதி” என்று சொல்லிவிட்டார்.
எனக்கு மேலோகம் மெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர் சொன்னதில் ஒரே ஒரு மகிழ்ச்சி. இவ்வளவு நாளாகத் டயருக்குக் கீழே என்ன, மேசைக்குக் கீழே என்ன என்று கீழேயே தரையையே பார்த்துக் கொண்டிருந்தவர் இன்றுதான் முதல் முறையாக மேலே நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் அவர் சொன்னது போல அவரின் உயிரை எல்லாம் நான் எடுக்க மாட்டேன். அவர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நல்ல ஆயுளுடன், நலமுடன் இருக்க வேண்டும். அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளராக அவர்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது, நமக்கும் நல்லது.
ஏற்கனவே நாம் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 10 தேர்தல்களில் தோல்வியை கொடுத்துள்ளோம். 10 தோல்வி பழனிசாமியை இந்தத் தேர்தலோடு மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இந்த சட்டமன்றத் தேர்தல்.
உங்களையெல்லாம் அன்போடு கேட்கிறேன், பண்போடு கேட்கிறேன், பாசத்தோடு கேட்கிறேன், உரிமையோடு கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன், இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால் தலைவரின் மகனாக இருந்து கேட்கிறேன், இன்னும் பெருமையாகப் பூரிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கலைஞரின் பேரனாக இருந்து கேட்கிறேன், அண்ணன் சிவசங்கர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அடுத்த 17 நாட்கள் இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சென்று மீண்டும் சங்கிக் கூட்டத்தை, அ.தி.மு.க பா.ஜ.க அடிமைக் கூட்டத்தைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது என்கிற பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துக்கொண்டு நீங்கள் சேர்த்துவிடுங்கள்.
உங்கள் அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி. ஆதரிப்பீர் உதயசூரியன், உதயசூரியன், உதயசூரியன்!
குன்னம் திமுக செயலாளர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், அரியலூர் வேட்பாளர் லதா பாலு, பெரம்பலூர் வேட்பாளர் எஸ்.டி.ஜெயலட்சுமி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், டி.கே.ராமச்சந்திரன், சுமதி கருணாநிதி, ஒன்றிய நகர மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், அழகு நீலமேகம், ராஜேந்திரன், ஜாகீர் உசேன், எழில்மாறன், பொன் செல்வம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன் என்கிற ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், சுப்பிரமணி, சிவசங்கர், தர்மராஜ், தமிழ்மாறன் ஐடி விங் மாவ்டட செயாளர் ரமேஷ் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497