Perambalur: Woman sets herself on fire over family dispute: Police investigating!
பெரம்பலூர் நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் ரோஸ் நகர் அருகில், தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் நேற்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்து அவசர போலீஸ் 100 -க்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போனவர், பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மனைவி முத்துலட்சுமி (43) என்பது தெரியவந்தது. முத்துலட்சுமி – மகேந்திரன் இருவருக்கும் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பவதாரணி (17), சுதர்சன ராஜா (11) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
மகேந்திரன் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மகேந்திரன் மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, தேவேந்திரன் வயலில் தீக்குளித்தது தெரியவந்ததது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.