பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அனைத்துப்பகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதிலும் குறிப்பாக கடந்த தேர்தல்களில் 70 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில வணிகர்களிடத்திலும், அவர்களிடம் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடத்திலும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் “ மே 16 – தவறாமல் வாக்களிப்போம், மறவாமல் வாக்களிப்போம்” என்ற வாசகம் அடங்கிய அச்சுகளை (சீல்) மாவட்ட வணிகர் சங்கப் பேரவையின் ஒத்துழைப்போடு பழைய பேருந்துநிலையம் பள்ளிவாசல் தெரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து கடைகளுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி வழங்கினார்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பில்களில் இந்த சீல்களை இட்டு வழங்குமாறும், அனைவரிடத்திலும் மே 16 ஆம் தேதியன்று மறக்காமல் வாக்களிக்க வேண்டுமென்று அறிவுறுத்துமாறும் மாவட்ட வருவாய் அலுவலர் கடை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.
சுமார; நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு இந்த சீல்களையும், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, பெரம்பலூர் வட்டாட்சியர் சிவா, வணிகர் சங்கங்களின் மாநில துணைத் தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள், கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கங்களுடன் வருவாய் கோட்டடாட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
கூரியர் சர்வீஸ் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் விநியோகிக்கப்படும் தபால்கள் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பப்படும் தபால்களில் விழிப்புணர்வு சீல்களை வைக்கவும் கேட்டுக்கொண்டார்.
இதேபோல தலைமை தபால் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் தபால்களிலும் இந்த விழிப்புணர்வு சீல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் ஆதித்யா ஷாப்பிங் மாலில் பொருட்களின் விலைப்பட்டியல் இடம்பெறும் இடங்களில் “மே-16 வாக்களிக்கத் தவறாதீர்” என்ற விழிப்புணர்வு வாசகங்களை வைத்துள்ளனர்.
இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் விதமாக அமைந்திருந்தது. வருவாய் கோட்டாட்சியர் இதனை பார்வையிட்டு கடைகளில் வாக்காளர் விழிப்புணர்வு போஸ்டர்ளை ஒட்டினார்.