In Perambalur: pillankulam Panchayat to execute villagers the award purity: Rs. 5 lakh prize
பெரம்பலூர் : பில்லங்குளம் ஊராட்சிக்கு தூய்மை கிராம இயக்க விருது : ரூ. 5 லட்சம் பரிசு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் ஊராட்சிக்கு சிறந்த முறையில் சுகாதார பணிகளை மேற்கொண்டதால் தமிழ்நாடு அரசு தூய்மை கிராம இயக்க விருது வழங்கி ரூ.5 லட்சம் ரொக்கபரிசு வழங்கி பாராட்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்தில் சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து பரிசு வழங்கி பாராட்டி வருகிறது. வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள பில்லங்குளம் ஊராட்சியில் பொதுமக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் பள்ளிகள்,
அங்கன்வாடி மையங்கள், சமுதாய கட்டடங்களில் கழிவறைகள் அமைத்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், திட, திரவ மேலாண்மைக்கான உள் கட்டமைப்புகள், கழிவு நீர் மறுசுழற்சி மற்றும் அகற்றுதல் தொடர்பான மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி தகவல் தொடர்பு போன்ற பணிகளில் பயிற்சி பெற்று அதனை செயல்படுத்தியது, உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டதால் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பில்லங்குளத்துக்கு தமிழக அரசு 2012-13 ம் ஆண்டுக்கான தூய்மை கிராம இயக்க விருதை வழங்கி ரூ.5 லட்சம் ரொக்கபரிசு வழங்கி பாராட்டியுள்ளது. விருது பெற்ற ஊராட்சித் தலைவர் சிங்காரவேலுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அதிகாரிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்.