President Ramnath Govinda meets with Cyprus chancellor: 2 agreements to sign
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தடுப்பதிலும், சுற்றுச்சூழல் துறையிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா, சைப்ரஸ் இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக சைப்ரஸுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அந்நாட்டு அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடிஸுடன் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பதாவது:
உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. நிகழாண்டின் முதல் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. இந்தியா-சைப்ரஸ் இடையிலான முதலீடு சார்ந்த தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்-2016இல் மாற்றங்கள் செய்வது தொடர்பாகவும் அதிபர் நிகோஸுடன் விவாதித்தேன். இரு தரப்பு நலன் சார்ந்த விஷயங்களுடன், பிராந்திய, சர்வதேச விவாகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தடுப்பது தொடர்பாக இந்தியாவின் நிதி உளவு பிரிவு மற்றும் சைப்ரஸ் நாட்டின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு பிரிவு ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், தகவல்தொழில்நுட்பம், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு:
இதனிடையே, சைப்ரஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் மின்னணுமயமாக்கல் திட்டம், பொலிவுறு நகரங்கள் திட்டம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, சுற்றுலா ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருமாறு, சைப்ரஸ் நாட்டின் தொழிற்துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அவர் மேலும் பேசுகையில், மேற்கண்ட துறைகளில் சைப்ரஸ் பங்களிக்க வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. பொருளாதார வளர்ச்சி, நவீனமயமாக்கல் ஆகியவையே இந்தியா நோக்கங்களாகும். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகவும், அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் சைப்ரஸ் திகழ்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு சைப்ரஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராம்நாத் கோவிந்த். முன்னதாக, சைப்ரஸ் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு மலர்தூவி அவர் மரியாதை செலுத்தினார். இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் 8-ஆவது இடத்தில் சைப்ரஸ் உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு சுமார் ரூ.58 ஆயிரம் கோடி ஆகும்.