Prosecuting The lawyer, walkout to Perambalur the court in a lawyers
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பசும்பலூர் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அன்புச்செல்வி மற்றும் மணிவேல் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், இரு தரப்பைச்சேர்ந்த ரவிச்சந்திரன், சீனிவாசராவ், குபேந்திரன், சுப்ரமணி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை மாவட்ட தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பசும்பலூர் கோவில் திருவிழாவில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் சீனிவாசராவ் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்திடும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, அண்ணாதுரை, பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக துணைத்தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் செயலாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் இன்று19ந்தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.