Rajini’s new political party in December: Rajini’s brother Sathyanarayana Rao interviewed
வருகிற டிசம்பர் மாதம் ரஜினி புதிய அரசியல் கட்சி அறிவிப்பார் என நாமக்கல்லில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கூறினார்.
நாமக்கல் சேலம் ரோட்டில் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற புதிய அலுவலகம் திறப்பு, சார்பு அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாமக்கல்லில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரஜினி மன்ற மாவட்ட செயலாளர் அரங்கண்ணல் தலைமை வகித்தார்.
விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கூறியதாவது:
டிசம்பர் மாதம் ரஜினி புதிய அரசியல் கட்சி அறிவிப்பார். இல்லையெனில் கட்சி அறிவிப்பு குறித்து அடுத்த தேதியை அவர் சொல்லுவார். கண்டிப்பாக அரசியலுக்கு ரஜினி வருவார். இந்த அறிவிப்பையும் அவரே கொடுப்பார். கட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டிசம்பர் மாதம் முடிவை அறிவிப்பார். பாஜகவின் ஆதரவோடு தான் ரஜினி அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இது தவறான வார்த்தை. அதெல்லாம் கிடையாது. சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற சம்பிரதாயத்தை மாற்ற முடியாது.
இதுதொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். கோர்ட் மறுபரிசீலனை செய்து நல்ல தீர்ப்பு வழங்கினால் அனைவருக்கும் சந்தோஷம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் இளவரசன் உள்ளிட்ட திரளான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் நாமக்கல் நகர செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.