பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணிநேரமும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று லப்பைக்குடிகாடு அருகே முத்துகுமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது பெரம்பலூரிலிருந்து பெண்னகோனம் சென்ற இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான முறையில் ரூ. 25 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லபட்டதை கண்டறிந்தனர்.
உடனடியாக பணத்தையும் அதனை கொண்டுவந்த ஏ.டி.மில் பணம் நிரப்பும் லாஜிக்கேஸ் நிறுவன ஊழியர் அப்துல் பாரிக் என்பவரையும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குன்னம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சம்மந்தப்பட்ட நபர் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித் துறை துணைஆணையர் ராமலிங்கம் எந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப எடுத்துச்செல்லப்படுகிறது என்பதையும், எந்த வங்கியிலிருந்து பணம் எடுத்துவரப்படுகிறது என்ற விவரங்களையும் அசல் ஆவணங்களையும் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்கான தொகைதான் என்பதை உறுதி செய்த பின்னர் விடுவித்தனர்.
மேலும் பெருந்தொகையை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்வதற்கு உத்தரவிட்ட பெரம்பலூர் முதன்மை கனரா வங்கியின் மேலாளருக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினார்.
பின்னர் லாஜிக்கேஸ் நிறுவன ஊழியரிடம் எச்சரிக்கை செய்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல் பெரம்பலூர் கோனேரிபாளையம் பிரிவு சாலையில் சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கீழப்புலியூரைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் காரில் உரிய ஆவணமில்லாமல் ரூ.54 ஆயிரம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டது.