Reservation Demand to Sub – Registrar, Commercial Tax Officer appionment: The PMK founder Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை
தமிழக அரசுத்துறைகளில் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர், இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும் போது இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசுத்துறை நியமனங்களில் சமூகநீதியை உறுதி செய்ய இத்தீர்ப்பு உதவும்.
வணிகவரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. துணை வட்டாட்சியர் பணியிடங்கள் முழுக்க முழுக்க மாறுதல் மூலமான நியமனம் வழியாக நிரப்பப்படுகின்றன. உதவியாளர் நிலையில் இருப்பவர்கள் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்பதால், இப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறினார்கள்.
இதே காரணத்தை முன்வைத்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை பணிகளில் நியமிக்கப்பட்டால் அதை பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனால் இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கடந்த 2005&ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணி நியமனங்களில் கடந்த 14 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி களையப்பட்டிருக்கிறது. பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கான விதிகளின்படி தான் மேற்கொள்ளப்பட வேண்டும். பதிவு சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு வருவாய் சார்நிலைப் பணிகள், தமிழ்நாடு வணிகவரி சார்நிலைப் பணி விதிகள் ஆகியவற்றின்படி வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணிகள் பதவி உயர்வின் மூலமாகவோ, இட மாற்றத்தின் மூலமாகவோ இல்லாமல் மாறுதல் மூலமான நியமனம் என்ற புதிய விதியின் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதை பதவி உயர்வாகக் கருதாமல், புதிய நியமனமாகவே கருத வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சார்நிலைப் பணியாளர்களின் கருத்தாகும். இதைத் தான் உச்சநீதிமன்றம் ஆதாரங்களுடம் தெளிவாக விளக்கி தீர்ப்பளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதன் மூலம் தான் மேற்கண்ட பணிகளுக்கான நியமனங்களில் சமூக நீதியை நிலைநாட்ட முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்தத் தீர்ப்பை பெற்றுள்ளது என்பதால், இத்தீர்ப்பை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு கொள்கை அளவிலான மாற்றுக் கருத்துகளும் இருக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசுத்துறை ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.
எனவே, இனியும் தாமதிக்காமல் வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணிகளுக்கு மாறுதன் மூலம் நியமனம் செய்யும் போதும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும், அதுமட்டுமின்றி, கடந்த 14 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் நிரப்பப்பட்டதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய பணிகளில் எத்தனை கை நழுவிப் போனது என்பதைக் கணக்கிட்டு, அவற்றைப் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்க வேண்டும். பின்னர் அந்தப் பணியிடங்களை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.