Sathiyanarayana, Trichy belonges to the petition to Tamil Nadu CM: demanding changes to the helmet law!

Model


திருச்சி மேல்கண்டார் கோட்டையை சேர்ந்த பா.சத்தியநாரயணன் முதலமைச்சருக்கு விடுத்துள்ள மனு:

“கட்டாய தலைக்கவச சட்டத்த்தின் பக்க விளைவுகள் சிலவற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.

தலைக்கவசம் அணிவதற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. உயிர்காக்க, தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதிவிரைவு நெடுஞ்சாலைகளிலும் நெரிசல் மிக்க நகர்ப்புற பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், ஒரு மிதிவண்டியின் வேகம்கூட செல்ல முடியாத முட்டு சந்துகளிலும் தலைக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்படுவது நியாயமில்லை.

அதேபோல் 350 / 500 சிசி திறன் கொண்ட அதிவிரைவு வண்டிகளுக்கும், 50 சிசி திறன் கொண்ட 30 கி மீ வேகத்தில் கூட இயக்க முடியாத மொபெட் போன்ற சிறிய வகை வாகனங்களுக்கும் எந்த வேறுபாடுமின்றி கட்டாய தலைக்கவச சட்டத்தை திணிப்பது ஏற்புடையதல்ல. அடுத்த தெருவிற்கு சென்று பாலோ, செய்தித்தாளோ வாங்க செல்லும் ஒருவரை தெரு முனையில் பிடித்து அபராதம் வசூலிப்பது எவ்வகை நியாயம்?

பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது மனைவி, குழந்தையோடு பயணிப்போர் குழந்தைக்காக அபராதம் செலுத்தியோ அல்லது காவல் அதிகாரியின் கருணையை வேண்டியோதான் பயணிக்க வேண்டும். அவர்களுக்கு காரில் செல்லும் அளவு பொருளாதார வசதி இல்லை என்பதால்தான் மூன்று பேர் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்ல நேரிடுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிக கள் பதிவு உரிமம் காப்பீடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் வந்தது.
நாட்டின் எங்கோ சில இடங்களில் புழுதியும் வேறுசில இடத்தில் பனிமூட்டமும் உள்ளதால் வெயில் கொதிக்கும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் முகப்பு விளக்கு எப்போதும் எரியும்படி புதிய வண்டிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு, வண்டியின் முகப்பு விளக்கை அணைக்கும் விசையே இல்லாமல் வண்டிகள் தயாரிக்கப்பட தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது.

தலைக்கவசம் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளால் வாகன ஓட்டிகளை மிரட்டி துரத்தியதால் நாகர்கோயில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் வாகன ஓட்டிகள் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் அடுத்த பேரிடியாக பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அந்த பயணம் மட்டுமே பணி அல்ல. வியாபாரிகள், விற்பனை பிரதிநிதிகள், பொருட்கள் கொண்டு சேர்ப்போர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வரவேண்டியவர்கள் அத்தனை முறை தலைக்கவசத்தை கழற்றி, கழற்றி மீண்டும் அணிவது சிரமம் எனினும் அணிகிறோம்.

ஆனால் வெளியூர் சென்று அங்குள்ளவரோடு வாகனத்தில் பயணிக்க நேர்வோர் தலைக்கவசத்தை தூக்கிச்செல்வது சாத்தியமா? முகமறியாத ஒருவரிடம் வேண்டுகோள் பயணம்(lift) மேற்கொள்வோரும் இதனால் புறக்கணிக்கபடுவர்.எனவே பின்னால் அமர்பவர் தலைக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்திற்கே விடப்படவேண்டும்.

எல்லா இடங்களிலும் அனைத்து வண்டிகளிலும் ஹெல்மெட் கட்டாயம் எனும் விதியில் மாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சிறு சாலைகளில் வி லக்கு அளிக்கப்பட வேண்டும்.

இங்கு கோரப்பட்டுள்ள விலக்குகள் கிடைத்தால் மட்டுமே நடுத்தர வர்க்கம் இருசக்கர வாகனத்தில் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும். இல்லையேல் இச்சட்டம் மென்மேலும் லஞ்சம் வளர்க்கவும், உயிர் பறிக்கவும் மட்டுமே பயன்படும் என்பதை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன் . எனவே இச்சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டுவரவும் இருசக்கர வாகன ஓட்டிகளின் துயர் துடைக்கவும் ஆவண செய்ய வேண்டுகிறேன்.

என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!