Special cleaning movement in all villages on the eve of Pongal: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊராட்சிகளுக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டுக் காலம் அதிகமாகிறது. எனவே, வரக்கூடிய பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்களிப்புடன் ஊரக பகுதியில் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப் பொலிவுடன் வைக்க வேண்டும்.
மாதந்தோறும் 5 மற்றும் 20-ஆம் தேதிகளில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுக்களால் பரவும் நோய்களை முழுவதும் தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சந்துகள், தெருக்கள், கிராம சாலைகள், கிராமங்களை ஒட்டிச் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிலுள்ள குப்பையை ஊராட்சியிலுள்ள பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டு முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
வடிகால்கள் மற்றும் சாக்கடை செல்லும் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கி, சுத்தப்படுத்தி கொசுமருந்து தெளித்து, டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊராட்சிக்கு 100 நூறு மரக்கன்றுகள்:-
ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றியக் கட்டிடங்களில் தேவையின்றி இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத பொருட்களை முற்றிலும் அகற்றி, அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுதவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் வேம்பு, புங்கன், மா, கொய்யா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளை ஊராட்சிக்கு 100 வீதம் நட வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:-
கொரோனா பேரிடரிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள இருதவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதும், எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பதும், பொது இடங்களில் சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதும் அவசியமாகிறது. எனவே, பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் முறையாக அணியவும், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், ஒமிக்கிரான் போன்ற தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தொடர்புடைய அலுவலர்களை ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து ஊரகப் பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.