Special Village Council meeting near Perambalur on the eve of World Water Day; Collector attended!
உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடபிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
வடக்கு மாதவி ஊராட்சியில் உள்ள 1,045 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் நமக்கு தண்ணீர் தேவை உள்ளது. ஆனால் வருடம் முழுவதும் மழை பொழிவது கிடையாது. பெரம்பலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் வருடத்திற்கு மூன்று மாதத்தில் பருவ மழையினால் நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. மீதமுள்ள ஏழு மாதத்திற்கு மழையே இருக்காது. நாம் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைத்தால்தான் நம் அன்றாட வேலைகளை கவனிக்க முடியும். நம் குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல வைக்க முடியும். நம் அலுவலகத்திற்கு செல்ல முடியும்;. நமக்கு கிடைக்கும் இயற்கை வளங்களை நாம் சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்.
இயற்கை வளம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் நம்முடைய வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்கிறோம். தண்ணீரினை பிடிப்பதற்கு அன்றாடம் நாம் அரை நாளை செலவிடக் கூடாது என்பதற்காகத்தான்; அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமத்தில் எத்தனை ஏரிகள் உண்டு எத்தனை நபர்களுக்கு தண்ணீர் தேவை உண்டு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு நீர் ஆண்டு முழுவதும் தேவைப்படும் அதனை எப்படி சேமிக்கலாம் இவ்வாறு சேமிக்கும் குடிநீரை எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என புரிந்து கொள்ள வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படும் ஆய்வகத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கிருமித் தொற்று உள்ளதா, உப்பு சரியாக உள்ளதா, குடிக்க தகுந்ததாக உள்ளதா என பரிசோதனை செய்து வழங்குகிறது. இந்த பரிசோதனையை நம் மாவட்டம் முழுவதும் 6,000க்கும்; மேற்பட்ட வீடுகளில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அனைத்துமே குடிப்பதற்கு தகுதியாக உள்ளது என சோதனை முடிவில் வந்துள்ளது.
ஒரு குடம் தண்ணீரை நாம் வீணாக்குகிறோம் என்றால் அந்தத் தண்ணீர் எங்கு இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதை நாம் ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அரும்பாடுபட்டு நாம் தண்ணீரை பொதுமக்களுக்கு கொண்டு வந்து சேர்கிறோம். எனவே நம் ஊராட்சிக்குட்பட்ட கிணறு ஏரி உள்ளிட்டவைகளில் மழைநீரை சுத்தமான சுகாதாரமான முறையில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். பைப்பில் வரும் குடிநீரை நாம் முறையாக பயன்படுத்திக் கொண்டால் ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீரினை கால்நடைகளின் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அதிகாரிகளைக் கொண்டு மட்டுமே நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க முடியாது என பேசினார்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு தரமான குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.