The central government should abandon the plan to tax groundwater for agricultural use; PMK Anbumani!
இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது ஆகும்.
நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள். நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க அரசு நினைத்தால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் உழவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது. அது ஏற்கனவே வாடிக்கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டும்.
நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்டவற்றுக்கு வரியும், கட்டணமும் விதிப்பதற்கான முயற்சிகள் கடந்த 15 ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் 2012-ஆம் ஆண்டில் தண்ணீர் கொள்கை வெளியிடப்பட்டது. அப்போதே அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு 2018, 2022 ஆகிய ஆண்டுகளிலும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றது. ஒவ்வொரு முறை மத்திய அரசு இந்த முயற்சிகளில் ஈடுபட்ட போதும் அதை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக எதிர்த்தது. இனியும் இதே நிலையே தொடரும்.
விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதது, உரங்களின் விலை உயர்வு, சந்தை வசதிகள் இல்லாதது என ஏற்கனவே பல வகைகளில் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து உழவர்களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை தொடக்க நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும், என பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.