The Collector examined precautionary measures to prevent dengue fever in the Perambalur Union

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறுகுடல், செங்குணம் பகுதிகளிலும் மற்றும் எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் அனைத்துப்பகுதிகளிலும் டெங்கு பராவாமல் தடுக்கத் தேவையான துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுகுடல் கிராமப் பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் இல்லங்களில் பிடித்து வைக்கப்பட்டிருந்த நீரில் ஏதேனும் டெங்கு கொசுப்புழு உள்ளதா என்று ஆய்வு செய்தார்கள். மேலும், நீர் சேகரிக்கும் கலன்களை மூடி வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும், நீர் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வீட்டின் வாசலில் கழிவு நீர் வாய்க்கால்களில் நீர் தேங்கும் வகையில் கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் அவ்வாறு கழிவுநீர் தேங்கியுள்ள வாய்க்கால்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தங்கள் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகளை சாக்கடை கால்வாயில் வீசி எறியக் கூடாது என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை வளாகத்தில் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளை முறையாக வெளியேற்றி மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் நலன் காக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் வகையில் துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் பணிமேற்கொள்ள வேண்டும் என்று வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து, மருத்துவரிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மக்களிடம் முறையாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்களா என்றும், டெங்கு காய்ச்சல் பாதிக்காமல் இருக்க நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சம்பத், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முரளி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!