பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் 3 மகன்கள் உள்பட 5 பேரை வ.களத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி முத்தம்மாள் (70). இவருக்கு சண்முகம் (45), கணேசன் (45), செல்வக்குமார் (38) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர், தொண்டப்பாடி கிராமத்திலிருந்து நெய்க்குப்பை கிராமத்துக்கு செல்லும் சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அங்குள்ள நியாயவிலைக் கடையிலிருந்து பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த இரும்பு பெட்டியை திறந்தபோது அந்தப் பெட்டி வெடித்தது.
இதில், பலத்த காயமடைந்து பெரம்பலுார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்க்பட்ட முத்தம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறி்த்து வ.களத்துார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது குறித்து மங்கலமேடு காவல் நிலைய ஆய்வாளர் சிட்ரிக் இமானுவேல், குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் ஜான் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், முத்தம்மாளுக்கும், அவரது மகன்களுக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததும், இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் சண்முகம், கணேசன், செல்வக்குமார், அவரது மருமகன் பெரியசாமி (45), சண்முகத்தின் நண்பர் அருளப்பன் (45) ஆகியோர் முத்தம்மாளின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, மேற்கண்ட 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.