The DMDK councilor resigns in the Union meeting
பெரம்பலூர்: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் இன்று அதன் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் பிச்சைபிள்ளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
அப்போது திடீரென எசனை கீழக்கரை தே.மு.தி.க., ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு எழுந்து நான் எதிர்கட்சி உறுப்பினர் என்பதால் ஒன்றிய நிதியிலிருந்து கீழக்கரை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
எனவே நான் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே இனி வரும் காலங்களில் எனது கீழக்கரை மக்களுக்கு நற்பயன்கள் கிடைக்கும் என்பதால் நான் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன் என கூறி பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என சேர்மன் ஜெயக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி ஆகியோரிடம் அளித்தார்.
ஆனால் ராஜினாமா கடித்தை இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் சேர்மன் ஜெயக்குமார் பேசுகையில், கீழக்கரை கவுன்சிலர் செல்வராசு கூறிய குற்றச்சாட்டு பொய்யானது.
கீழக்கரைக்கு ஒன்றிய நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து கீழக்கரை பகுதிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பின்னர் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் கருணாநிதி, சேகர், அண்ணாதுரை, பால்ராஜ், புகழேந்தி, கைலாயி, ஜானகி, ராஜேஸ்வரி, பச்சையம்மாள், தேவகி மற்றும் மேலாளர் சங்கீதா, ஒன்றிய பொறியாளர் சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.