The elephant holy fountain Arulmigu Srinethira Ganesha Temple Kumbabhishekam!
பெரம்பலுாரில், சமயபுரம் யானை புனித நீரூற்றி, அருள்மிகு ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு இந்திரா நகரில், எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் நுாதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடந்தது.
விழாவில், சமயபுரம் யானை பங்கேற்று, பிரம்மபுரீஸ்வர் ஆலயத்திலிருந்து புன்னிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்து அருள்மிகு ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிகளுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து வைத்தது. இதற்காக, இளம் பூசாரி கேப்டன் பிரபாகரன் புனித நீரை சுமந்து, யானையின் மீது அமர்ந்து ஊர்வலமாக வந்தார். இதைத் தொடர்ந்து, அரசு- வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக, கொல்லிமலை அம்மையார் சித்தர் பீடம் முதல் தலைமை பீடாதிபதி சிவராஜசேகர சிவனடியார் தலைமையில், வாஸ்து வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, குரு வழிபாடு, சங்கல்ப வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, அம்மையப்பன் வழிபாடு ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில், தாசில்தார் புகழேந்தி, கோவில் பூசாரி முருகேசன், சாந்தி, முக்கியதர்கள் சேகர், விஜி மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர். விழாவில், பம்பை மங்கல வாத்தியங்கள், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், கருப்புசாமி ஆகிய சுவாமி வேடமணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.