The Perambalur Collector requested to celebrate Deepavali without accident, pollution and sound.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுதுள்ள செய்திக்குறிப்பு:
தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாச்சாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோருவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும், நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்துக் கொண்டது.
இவ்வழக்கில், உச்ச நீதிமன்றம் 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் தீபாவளி பண்டிகையன்று இரவு 8.00 முதல் இரவு 10.00 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தது. பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டு மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, தீபாவளி பண்டிகை நாளன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், அந்த 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகியுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மேலும் மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.
மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.