There is no room for talk of fare hike in government buses – Transport Minister Sivashankar!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூரில் ரூ.64 இலட்சம் மதிப்பீட்டிலான ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், கொளத்துாரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும், புதுக்குறிச்சியில் முழுநேர நியாய விலைக் கடையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், நீண்டநாளாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள மக்களின் 10 விதமான கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், அந்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், குன்னம் சட்டமன்றத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் கடந்தகால அரசு செவிசாய்க்க வில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும்போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையினை ஏற்றுக்கொள்ளும் என்றும், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இது மக்களின் நலன் காக்கும் அரசு, மக்களுக்கான அரசு எனவே, அரசுப்பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற பொய்யான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம். என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!