To control corona, integrated command control panel: Perambalur Collector Information


பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுத்திடும் வகையில் தீவிர நோய்த்தடுப்பு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான கோவிட் பராமரிப்பு மையங்களில் உணவு, படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ / அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை கண்காணித்தல் மற்றும் ஆக்ஸிஜன் வரவு, பயன்படுத்திய மற்றும் இருப்பு, நியமனம் செய்யப்பட்ட பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் தினசரி நடவடிக்கைகளை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கை பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட துறை அலுவலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டுக்குழு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுத்தலைவராகவும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு அலுவலராகவும் நியமித்து இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளி கடைபிடிப்பதினை கண்காணித்திடும் வகையில் குறுவட்ட அளவில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், அங்கன்வாடி பணியாளர், கிராம சுகாதார செவிலியர், ஊராட்சி செயலர் மற்றும் கிராம தன்னார்வலர் (வட்டாட்சியரால் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்) உள்ளடக்கிய கிராம விழிப்புணர்வுக்குழு அமைக்கப்பட்டு நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறியவும், வீடு வீடாகச் சென்று ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்திடவும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நகராட்சி பகுதிகளில் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நோய் கண்டறியும் பணிகளில் ஈடுபடவும், தொற்று ஏற்படும் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நோய் கண்டறியும் பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும், உடல்நிலை வெப்ப பரிசோதனை செய்திடவும் சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிட வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சிப் பகுதியில் உள்ள 21 வார்டுகளில், வார்டு ஒன்றுக்கு தலா ஒருவர் வீதம் 21 நகராட்சிப் பணியாளர்களும் மற்றும் 42 சுகாதாரத்துறை பணியாளர்களும், பேருராட்சிப் பகுதியில் உள்ள 15 வார்டுகளில் வார்டு ஒன்றுக்கு தலா ஒரு நபர் வீதம் மொத்தமுள்ள நான்கு பேரூராட்சிகளில் 60 பேரூராட்சிப் பணியாளர்களும் மற்றும் 120 சுகாதாரப்பணியாளர்களும், கிராம அளவில் 152 கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை மீறுவோர் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்பொருட்டு கிராம அளவில் 22 வருவாய்த்துறை அலுவலர்களும், 121 கிராம ஊராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி செயலர்களும், 119 கிராம சுகாதார செவிலியர்களும் கொரோனா நோய்த் தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 326 வருவாய்த்துறை அலுவலர்களும், 281 சுகாதாரத்துறை பணியாளர்களும், உள்ளாட்சி அமைப்புகளில் 242 பணியாளர்களும், காவல்துறையிலிருந்து 22 காவலர்களும், நகராட்சியில் 21 பணியாளர்களும், பேரூராட்சியில் 60 பணியாளர்களும் என மொத்தம் 952 அரசு பணியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 04328-1077 மற்றும் 1800-425-4556 செயல்பட்டு வருகிறது. கொரோனா தொடர்பாக சந்தேகங்களுக்கு பொதுமக்கள் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றிடவும். பொதுமக்கள் அவசர மற்றும் அவசியமான காரணத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லவும், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளாக காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூக்கு மணமின்மை போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கோள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களின் முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!